சென்னை:எண்ணூர் அனல் மின் நிலையத்தில், 1,320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைப்பதற்கான, சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.மாநிலத்தின் மின் உற்பத்திக்கும், தேவைக்குமான பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில், தினமும் மின் பயன்பாடு, 180 மில்லியன் யூனிட்டில் இருந்து, 230 மில்லியன் யூனிட்டாக உயர்ந்து உள்ளது.பெரும் நெருக்கடியில் உள்ள, மின் தட்டுப்பாட்டை போக்க, தற்போது நடைபெற்று வரும், மின் உற்பத்தி திட்ட பணிகளை, மாநில அரசு விரைவு படுத்தி வருகிறது.அரசு அறிவித்த மின் திட்டத்தில், 3,600 கோடி ரூபாயில், எண்ணூர் அனல் மின் நிலையத்தில், 660 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடைய இரு அலகுகள் கொண்ட, "சூப்பர் கிரிடிக்கல்' அனல் மின் நிலையம் அமைப்பதற்கான, சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்திற்கான, கடன் நிதி அளிப்புடன் கூடிய பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணியை, ஒரே தொகுப்பாக மேற்கொள்ள, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு, 5 கோடி ரூபாய் பிணை தொகையாக செலுத்தப்பட வேண்டும். ஒப்பந்த புள்ளியில், பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், ஜூன், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அன்று மாலையே ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.