ஆலங்குளம் அருகே பயோகாஸ் மூலம் மின்மோட்டார் மற்றும் வாகனங்கள் இயக்கம்: தொழிலதிபருக்கு எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி பாராட்டு


    திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிபட்டியில்,தனியார் ஆலையில்,மின்மோட்டார் மற்றும் வாகனங்கள் பயோகாஸ் மூலம் இயக்குவதற்கு மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி பாராட்டு தெரிவித்தார்.
ஆலங்குளம் அருகே உள்ள மணல்காட்டானூரை சேர்ந்தவர் பி.செல்வப்பாண்டி.இவர் ஆண்டிப்பட்டியில் சலவைசோப் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவரது ஆலையில் உள்ள மின்மோட்டார்கள் (ஜெனரேட்டர்கள்)400 கனமீட்டர் பயோகாஸ் கலன் மூலம் இயங்குவதை அறிந்த மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சக விஞ்ஞானி மற்றும் இயக்குநர் டாக்டர் கிரிதர், ஆலைக்கு நேரிடையாக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.தொடர்ந்து ஆலையில் உள்ள கனரக வாகனத்தை பயோகாஸ் மூலம் இயக்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து,பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பயோகாஸ் முறை மிகவும் பாதுகாப்பானது.சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது.கழிவுநீர் மற்றும் சாக்கடை கழிவுகள் மூலம் எரிவாயு தயார்செய்து,மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு 40 சத மாநியம் வழங்குகிறது.இங்கே இத்திட்டத்தை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2500 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்படுவதால் ஆலையை நடத்த 24 மணி நேரமும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கும்.மின் தட்டுப்பாடு இருக்காது.இத்திட்டத்தை பயன்படுத்தினால் ஆகும் செலவானது,மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து 50 சதமும்,மின் மோட்டாருக்கு டீசல் பயன்படுத்துவதில் இருந்து 80 சதமும்,வாகனங்களுக்கு டீசல் பயன்படுத்துவதில் 50 சதவீதமும் சேமிக்கபடுகிறது என்றார் அவர்.
இது குறித்து பயோகாஸ் முறையை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்துவரும் தொழிலதிபர் பி.செல்வப்பாண்டி கூறியதாவது:
பயோகாஸ் முறையில் ஆலையில் உள்ள மின்மோட்டார்களை இயக்க வேண்டும் என எண்ணியவுடன்,தூத்துக்குடியை சேர்ந்த கிரேஷ் லயன் பயோ எனர்ஜி நிறுவன பொறியாளர் செல்வராஜ் ஐ தொடர்பு கொண்டு அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டேன்.அதன் காரணமாக டிசம்பர் 8 ல் பயோகாஸ் மூலம் மின் மோட்டார்களை இயக்குவதை தொடங்கினோம்.இதன் மூலம் 125 kva திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்களும்,62.5 kva திறன் கொண்ட ஒரு மின் மோட்டாரும் இயக்கி வருகிறோம்.பயோகாஸ் மூலம் மின் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.ஆனால் பலன் அதிகம்.
 125 kvaமின் மோட்டார் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் இயக்குகிறோம்.62.5  kva மின்மோட்டார் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் இயக்குகிறோம்.ஒரு மணி நேரத்திற்கு 14 லிட்டர் டீசலில் இயக்கி வந்த மின் மோட்டார் தற்போது 2 லிருந்து 3 லிட்டர் டீசலே போதுமானதாக அமைகிறது.இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு எங்களுக்கு ரூ.500 வரை சேமிப்பாகிறது.தற்போது இவ்வாயுவை சிலிண்டரில் அடைத்து வாகனங்கள் இயக்கும் பணியையும் தொடங்கியுள்ளோம்.இதிலும் எங்களுக்கு அதிகளவில் டீசல் சேமிப்பாகும் என்றார் அவர்.
இப்பணியை மேற்கொண்ட கிரேஷ்லயன் பயோ எனர்ஜி நிறுவனப் பொறியாளர் செல்வராஜ் கூறியதாவது:
தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் நிறுவனங்களில் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மூலம் எரிவாயு தயாரித்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியினை பலவருடங்களாக செய்து வருகிறோம்.அண்மையில் தூத்துகுடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டனத்தம் ஊராட்சியில் மகளிர் சுகாதாரவளாக கழிவு மற்றும் கழிவுநீர் மூலம் எரிவாயு தயாரித்து மின்சாரம் உற்பத்தி செய்து தெருவிளக்கு எரிகிறது.திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள கழிவுகள் மூலம் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்து, எரிவாயுவை சிலிண்டரில் அடைத்து வாகனம் இயக்கவும் பயன்படுத்த முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் தொழில்நுட்ப அலுவலர் டி.சுப்பிரமணியபெருமாள்,மாவட்ட சுகாதாரத்திட்ட ஒருங்கிணைப்பாளர் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments: