மேட்டூர் அனல்மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி (thinaboomi)


மேட்டூர் அனல்மின் நிலைய 3-வது யூனிட்டில் மின் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடங்கியது: முதல் நாளிலேயே 500 மெகாவாட் உற்பத்தி.
 1/1 

சென்னை, ஏப். 4  - மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 3 வது யூனிட்டில் சோதனை ஓட்டம் தொடங்கிய முதல் நாளே 500 மெகாவாட்டை எட்டியுள்ளது. தமிழக மின் உற்பத்தியில் நிலக்கரியை பயன்படுத்தி எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை ஆகிய நான்கு இடங்களில் அனல் மின்சார உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழக மின் நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது தவிர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நெய்வேலியிலும் 3 யூனிட்டுகள் செயல்படுகின்றன. 
தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சாரம் புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் பெறப்பட்டு மின் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மேட்டூரில் கடந்த 1987 ம் ஆண்டு 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1990 ம் ஆண்டு 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 3 யூனிட் தொடங்கப்பட்டது. 

இங்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ரூ. 3,56469 கோடி மதிப்பில் 600 மெகாவாட் உற்பத்தி செய்யும் திட்டப் பணிகள் கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது. இந்நிலையில் முதல் கட்டமாக சோதனை ஓட்டத்தை தொடங்கி உள்ளது. இது குறித்து மின்சார துறை அதிகாரிகள் கூறியதாவது, 
புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை போக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேட்டூர் அனல் மின்சார நிலையத்தின் 3 வது யூனிட் அதிகாரபூர்வமாக மின்சார உற்பத்தியில் சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது. 
வரும் மே மாதம் சோதனை ஓட்டத்துடன் மின்சார உற்பத்தி தொடங்குவதாக இருந்தது. ஆனால் அரசின் முயற்சியால் முன்கூட்டியே இந்த மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் முதல் நாளே எதிர்பார்த்தபடி 508 மெகாவாட் அளவு மின்சார உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து இது போன்று மின் உற்பத்தி இருக்கும். இதன் மூலம் தமிழகத்திற்கு போதிய அளவு மின்சாரம் கிடைப்பதால் ஓரளவு மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 
ஓரிரு மாதங்களில் மொத்த இலக்கான 600 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும். தொடர்ந்து பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால் வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கும். ஆனால் பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மேட்டூர் அனல் மின்சார நிலையம் போதிய உற்பத்தியை தொடங்கவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் 4 ம் தேதியே எந்திரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டது. 
தொடர்ந்து நிலக்கரி நிரப்பும் பணி தொடங்கி சோதிக்கப்பட்டதில் 300 முதல் 400 மெகாவாட் என்ற அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தது. மேட்டூர், தூத்துக்குடி, வல்லூருக்கு தேவையான நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கண்டெய்னர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. 
மேட்டூருக்கு மட்டும் ரயில்களில் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது நிலக்கரியின் தேவை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் நிலக்கரியை தங்குதடையின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து வல்லூர் அனல் மின் நிலையத்தின் 3 வது யூனிட் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் அதுவும் சோதனை அடிப்படையில் மின்சார உற்பத்தியை தொடங்கவுள்ளது. இதன் மூலம் தமிழக மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments: