நடப்பாண்டில் மின் கட்டண உயர்வு இல்லை


நடப்பு ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்தாமல் இப்போது நடைமுறையில் இருக்கும் மின் கட்டணமே தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் பரிந்துரை சமர்ப்பித்துள்ளது.
இதன் மூலம் நடப்பு ஆண்டில் மின் கட்டண உயர்வு எதுவும் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி 2012 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், மின் பயனீட்டுக் கட்டணம் பன் மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் பல மாநிலங்கள் மின் கட்டணத்தைச் சரியான நேரத்தில் உயர்த்தாமல் பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. தமிழகம் உள்பட 29 மாநிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் திடீரென மின் கட்டணத்தை பன் மடங்கு உயர்த்துவதால் நுகர்வோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் மின் கட்டணங்களை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு மின் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை மின் வாரியங்கள் சமர்ப்பிக்காவிட்டால் அந்தந்த மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள், தாங்களாகவே முன்வந்து மின் கட்டணத்தை மாற்றியமைக்கக்கூடிய அதிகாரத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என மத்திய மின்சார தீர்ப்பாயம் 2011-இல் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனடிப்படையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் 2013-14
ஆண்டுக்கு மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை மின் வாரியம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி சமர்ப்பித்தது.
இந்தப் பரிந்துரை ஆணையத்தின் பரிசீலனையில் இருக்கும்போதே, மற்றொரு மனுவை மின் வாரியம் சமர்ப்பித்தது. அதில் மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான பரிந்துரை பிப்ரவரி 19-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் மார்ச் 31-ஆம் தேதிக்குள் புதிய கட்டணத்துக்கான உத்தரவை ஆணையம் பிறப்பிப்பது மிகவும் கடினம்.
எனவே, நடைமுறையில் இருக்கும் மின் கட்டணமே தொடர அனுமதி நீட்டிப்பு வழங்குமாறு மின் வாரியம் கோரியிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட ஆணையம், 2013 ஜூன் 20-ஆம் தேதி வரை அல்லது புதிய மின் கட்டண உத்தரவு பிறப்பிக்கும் வரை, நடைமுறையில் இருக்கும் கட்டணத்தையே வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் அண்மையில் மற்றொரு மனுவை மின் வாரியம் சமர்ப்பித்தது. அதில், குடிசை வகை மற்றும் வேளாண் வகைப் பிரிவுகளுக்கு மட்டும் மாற்றியமைப்பதற்கு பரிந்துரைத்திருப்பதோடு, மற்ற நுகர்வோர் அனைவருக்கும் நடைமுறையில் இருக்கும் மின் கட்டணமே தொடர்ந்து இருக்க அனுமதிக்குமாறு கோரியுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டில் மின் கட்டண உயர்வு இருக்கப் போவதில்லை. மேலும், குடிசை மற்றும் வேளாண் பிரிவினருக்கு மாற்றியமைக்க கோரியிருக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசே மானியமாகக் கொடுத்துவிடும்.
இந்த நிலையில் தொடர்ந்து இதுபோல் சிறிய அளவில்கூட மின் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதிரடி மின் கட்டண உயர்வை தமிழக மக்கள் சந்திக்க நேரிடும் என சமூக ஆர்வலர்
கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

No comments: