ஊழல் தடுப்புச் சட்டம் மின் ஊழியர்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது. அதில், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழியர்களும் அரசு ஊழியர்களாகவே கருதப்படுவார்கள் என்றும், ஊழல் தடுப்புச் சட்ட விதிகள் மின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வி.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அபுடு குமார் ராஜரத்தினம், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றும் அனைவருமே அரசு ஊழியர்களாகவே கருதப்படுவார்கள் என்பதும், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் வரையறைக்குள் மின் ஊழியர்களும் வருவார்கள் என்பதும் ஏற்கெனவே உள்ள மின்சாரச் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டார்.எனினும் விசாரணையின் முடிவில் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார். மின் பகிர்மானக் கழகத்தில் ஒரு ஊழியர் மேற்கொள்ளும் பணியின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது அவரது பணியை அரசுப் பணி அல்ல என்று கூற முடியாது. அவர் தன்னை தனியார் நிறுவன ஊழியர் என்றும் கூறிக் கொள்ள முடியாது. இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின்படி மின் ஊழியர்கள் அனைவருமே அரசு ஊழியர்களாகவே கருதப்பட்டு, அந்த சட்டத்தின் வரம்புக்குள் அவர்களும் கொண்டு வரப்படுவார்கள் என்ற அறிவிப்பாணையில் தவறேதும் இல்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


http://dinamani.com/latest_news/article1533809.ece

No comments: