திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 450 முதல் 500 டன் வரையிலான கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன.
சேகரமாகும் குப்பை, வெள்ளியங்காடு பாறைக்குழியிலும், வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளிலும் கொட்டப்பட்டு வருகின்றன. கோவில்வழியில் செயல்பட்டு வந்த உரக்கிடங்கு, கோர்ட் வழக்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.இந்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நகராட்சி நிர்வாக ஆணையரகம், திருப்பூர் மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சேகரமாகும் திடக்கழிவுகளில், எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு மின்சாரம் தயாரித்து, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை, ஆடுவதைக்கூடம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் இருந்து தினமும் 30 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் கிடைக்கின்றன.
எனவே, முதல்கட்டமாக, மக்கும் குப்பைகளில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் இருந்து தினமும் 30 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சந்தைப்பேட்டை வளாகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான "பிளான்ட்' அமைக்க போதிய இட வசதி உள்ளது.
முதல்கட்டமாக, ஐந்து மெட்ரிக் டன் அளவுள்ள குப்பையை கொண்டு, மீத்தேன் வாயுவை உருவாக்கி, அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆடுவதைக் கூடம் அருகிலேயே "பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக, உத்தேசமாக, 90 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் இருந்தும், பொதுமக்கள் பங்களிப்பு மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
No comments:
Post a Comment