புதிய ஓய்வூதியத் திட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன்?

புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்காதது ஏன் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் கேள்வி எழுப்பினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டுச் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது:புதிய ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அடிப்படையாகக் கொண்டது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பிடித்தம் செய்து அதற்கு இணையான தொகையை அரசு வழங்கி, இரண்டையும் ஒன்றாக்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இத் திட்டத்தால் ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்று அதனைப் பெறும் பயனாளிகளே கணிக்க முடியாது. ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை எங்கு செல்கிறது என்ற விவரம்கூட ஊதியதாரர்களுக்குத் தெரியாது.

 புதிய ஓய்வூதியத் திட்டத்தால் ஊழியர்கள் பெற்று வந்த சேம நலநிதி, வருங்கால வைப்பு நிதி, குடும்ப ஓய்வூதியம் போன்ற போராடிப் பெற்ற பல சட்ட உரிமைகள் பறிபோகின்றன.பழைய ஓய்வூதியத் திட்டப்படி ஓய்வூதியம் பெற்றுபவர்களுக்கு விலைவாசி ஏற்றத்தால் அகவிலைப்படி உயரும்போது ஓய்வூதியத் தொகையும் அதற்கேற்ப உயரும். புதிய திட்டத்தில் அப்படி இல்லை. 2004 ஜன.1-இல் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை. மத்திய நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினார்.

 நாடாளுமன்றத்தில் மசோதாவாக விவாதிக்காமலும், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்யாமலும் இதை அறிவித்தார்.இவ்வளவு பெரிய கொள்கை மாற்றத்தை நாடாளுமன்ற விவாதமே இல்லாமல் நடைமுறைப்படுத்தியது இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.திண்டுக்கல் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், மாவட்டத் தலைவர் பி.லியோ உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...