புதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்தது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 காசில் இருந்து ரூ.1 ஆக அதிகரிப்பு

புதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்ந்தது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 காசில் இருந்து ரூ.1 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி, ஏப்.13-

புதுவை மாநிலத்தில் 2 லட்சத்து 81 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. வீடு, வர்த்தக நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பொதுமக்கள் கருத்துக்களை கேட்டது. அதில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அதையும் மீறி இப்போது புதுவையில் மின்கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்துறை வெளியிட்டுள்ளது. யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 40 காசுகளில் இருந்து அதிகபட்சமாக 1 ரூபாய் 15 காசுவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 100 யூனிட்வரை முன்பு ரூ.60 காசாக இருந்தது. அது ரூ.1 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

101 யூனிட்டில் இருந்து 200 யூனிட்வரை 95 காசாக இருந்தது. அது ரூ.1.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 201 யூனிட்டில் இருந்து 300 யூனிட்வரை ரூ.1.80 ஆக இருந்தது. அது ரூ.2.80 ஆக உயர்தப்பட்டுள்ளது. 300 யூனிட்டுக்கு மேல் ரூ.2.35 ஆக இருந்தது. அது ரூ.3.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு 100 யூனிட் வரை ரூ.2.50 ஆக இருந்தது. அது ரூ.3.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 101 யூனிட்டில் இருந்து 250 யூனிட் வரை ரூ.3.70 ஆக இருந்தது. அது ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

250 யூனிட்டுக்குமேல் ரூ.4.30 ஆக இருந்தது. அது ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிசை கட்டணங்களுக்கு மாற்றம் இல்லை. குடிசை தொழில்களுக்கான மின்கட்டணம் வீட்டு உபயோக மின்கட்டணம் அளவில் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந் தேதி முன்தேதியிட்டு வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.