கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி

ராதாபுரம், ஏப். 2- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. முதலாவது அணு உலையில் மாதிரி எரிபொருள் அகற்றம், செரியூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருள் நிரப்புதல் ஆகிய பணிகளை தொடர்ந்து அழுத்தம், வெப்ப சோதனைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 


அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் அணு உலை எதிர்பாளர்களின் தொடர் போராட்டத்தால் மின் உற்பத்தி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடங்குளத்தில் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட மின் உற்பத்திக்கு முந்தைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுகுறித்து அணு நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது:- 

அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு ஏதுவாக முதலாவது அணு உலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அணு உலை செயல்பாட்டிற்கு வரும் போது எவ்வளவு அழுத்தத்தில், வெப்ப நிலையில் அணு உலை கலன் இருக்க வேண்டுமோ அதே அழுத்தம் வெப்ப நிலைக்கு அணு உலை அழுத்த கலனை கொண்டு வந்து, பின்னர் அதிலுள்ள வால்வுகள் மூலம் நீராவி வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 

இது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சோதனையின் போது நீராவி மட்டுமே வெளியேற்றப்பட்டது. அணு உலையில் நடை பெறும் அனைத்து பணிகளும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்கொள்ளபடுகின்றன என்றார். சோதனை ஓட்டத்தின் இறுதி கட்டமாக அழுத்த கலன் வால்வுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிற உபகரணங்களையும் இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. 

இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும். அதன் பின்னர் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மின் உற்பத்திக்கான இறுதி கட்ட ஒப்புதலை ஆணையம் அளிக்கும். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

2-வது அணு உலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிலும் மின் உற்பத்தி தொடங்கிவிடும். இந்த நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நாளை அணு உலை ஊழியர்கள் குடியிருப்பான அணு விஜய் நகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1 comment:

VOICE OF INDIAN said...

என்னாதான் கூட்டம் போட்டாலும் போராட்டம் நடத்தினாலும் போட்டி எங்க கிடைக்குமோ அங்கதானே வெற்றி இருக்கு