திருப்பூர் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு

 திருப்பூர் மற்றும் கருவலூரில், புதிதாக230 கே.வி., துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. திருப்பூர் மின் பகிர்மான வட்ட பகுதிகளில், ஆறு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின்சாரத்தை, உயர் மற்றும் தாழ்வழுத்த பிரச்னை இல்லாமல், சீராக வழங்கும் வகையிலும், நுகர்வோருக்கு போதிய அளவு மின் வினியோகம் செய்யும் வகையிலும், புதிய தொழிற்சாலை இணைப்புகள் வழங்கவும் கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. மொத்தம் 11 துணை மின் நிலையங்கள் அமைக்க, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.  ஆனால், துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் கிடைக்காமல் மின்வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்திலும், கருவலூரில் விலைக்கு வாங்கப்பட்ட 10 ஏக்கர் நிலத்திலும், துணை மின் நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர்மற்றும் கருவலூரில் 20 கோடி ரூபாய் செலவில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேவைப்படும் மற்ற இடங்களிலும், துணை மின் நிலையம் அமைக்க இடம் ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இடம் கிடைத்தால், மற்ற இடங்களிலும் அமைக்கப்படும்,' என்றனர்.

No comments: