மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை: மே 3ஆம் தேதி முதல் நேரடி கருத்து கேட்பு


குடிசைப் பிரிவினர் மற்றும் வேளாண் பிரிவினருக்கு மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் செய்துள்ள பரிந்துரை மீது மே 3ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட உள்ளன.
குடிசைப் பிரிவினருக்கான நிலையான மின் கட்டணத்தை ரூ. 60-லிருந்து ரூ. 120-ஆக உயர்த்தவும், வேளாண் பிரிவினருக்கான நிலையான மின் கட்டணத்தை ரூ. 1,750-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தவும் உத்தேசித்து இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் சமர்ப்பித்துளளது.
இந்தப் பிரிவினர்களுக்கு மின் வாரியம் பரிந்துரைத்துள்ளதன்படி நிலையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அதை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு கூடுதல் மின் கட்டண மானியமாக வழங்கும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.
இருந்தபோதும், இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. ஆன்-லைன் மூலம் கருத்து கேட்பு முடிந்துவிட்ட நிலையில், இப்போது பொதுமக்களிடம் நேரடி கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது.
மே 3-ஆம் தேதி சென்னையிலும், 8-ஆம் தேதி திருச்சியிலும், 10-ஆம் தேதி மதுரையிலும், 17-ஆம் தேதி கோவையிலும் இந்த நேரடி கருத்துகேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

No comments: