Showing posts with label மீட்டர். Show all posts
Showing posts with label மீட்டர். Show all posts

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

 


மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு

TNERC Supply Code – Regulation 11(2) & 11(5)


📌 Regulation 11(2)

மீட்டர் பழுதாகி / சரியாக இயங்காத காலத்திற்கான மின் நுகர்வை கணக்கிடும்போது, பொதுவாக முந்தைய 4 மாதங்களின் சராசரி நுகர்வு அடிப்படையாகக் கொள்ளப்படும்.

அந்த 4 மாதங்களின் பயன்பாட்டு நிலைமை, மீட்டர் பழுதான காலத்தின் பயன்பாட்டு நிலைமைக்கு ஒத்ததாக இருக்க வேண்டும்.


📌 Regulation 11(5)

முந்தைய 4 மாதங்களின் பயன்பாட்டு நிலைமை மாறுபட்டிருந்தால், அந்த 4 மாதங்களின் சராசரியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்யக்கூடாது.

அதற்கு பதிலாக, முந்தைய 12 மாதங்களில், மீட்டர் பழுதான காலத்தின் பயன்பாட்டு நிலைமைக்கு ஒத்ததாக இருந்த தொடர்ச்சியான 4 மாதங்களின் நுகர்வை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.


⚖️ மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Senthil Vs. The Office of the Tamil Nadu Electricity Ombudsman

📄 W.P.No.33326 of 2024
📅 தீர்ப்பு: 04.12.2025

மீட்டர் பழுதான காலத்திற்கு முந்தைய 4 மாதங்களின் மின் நுகர்வில் குறிப்பிடத்தக்க வேறுபாடு / மாறுபட்ட பயன்பாட்டு நிலைமை இருந்தால், அந்த 4 மாதங்களின் சராசரியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு Regulation 11(2)-ன் கீழ் கணக்கிடுவது பொருத்தமானதல்ல.

அத்தகைய சூழ்நிலையில், Regulation 11(5)-ன் அடிப்படையில் முந்தைய 12 மாதங்களில் ஒத்த பயன்பாட்டு நிலைமை கொண்ட தொடர்ச்சியான 4 மாதங்களைத் தேர்வு செய்து மின் நுகர்வை கணக்கிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⚖️ விதிமுறைக்கு ஏற்ப சரியான கணக்கீடு — முறையான நடைமுறை

Regulation 11(2) மற்றும் 11(5)-ஐ உரிய சூழ்நிலைக்கேற்ப பின்பற்றி, மின் நுகர்வு கணக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

━━━━━━━━━━━━━━━━━━

📰 மின்துறை செய்திகள்

🌐 tangedco.blogspot.com

📘 முகநூல்: மின்துறை செய்திகள்
facebook.com/tangedconews

தகவல் • சட்ட விதிகள் • மின்துறை விழிப்புணர்வு

விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் பி.தங்கமணி கூறினார். - தினதந்தி செய்தி

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று எரிசக்தித் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மாநிலம் வளர சட்டம்-ஒழுங்கு, மனிதவளம், மின்சாரம் ஆகிய மூன்றும் இன்றியமையாதது. இது மூன்றும் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது. அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 15,410 மெகாவாட் மின்சார உற்பத்தியை புதிதாக கொண்டு வந்திருக்கிறோம்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். இப்போது ஒரு நிமிடம் கூட மின்வெட்டு இல்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மின்மிகை மாநிலம் என்று கூறியதை இன்றளவும் காத்து வருகிறோம். தமிழகத்தில் இப்போது 3 கோடியே 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. தடையில்லா மின்சாரம் கொடுக்கப்பட்டு வருவதால், ஆந்திராவில் உள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்திற்கு சென்றுவிடலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின்சாரமும், அடுத்த 5 ஆண்டுகளில் 13,110 மெகாவாட் மின்சாரமும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை திருப்திகரமாக இருப்பதால் மின்வெட்டே இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 340 துணை மின்நிலையங்களை அமைத்துள்ளோம். காற்றாலை மின்சாரம் என்பது ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கிறது. அதிகமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு கிடைக்கிறது. ஆனால், திடீரென்று 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துவிடுகிறது. இதை ஈடுசெய்ய அனல்மின் நிலையங்களைத்தான் நாட வேண்டியுள்ளது.

மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தர வேண்டும். ஆனால், 4 ஆயிரம் மெகாவாட் அளவுக் குத்தான் மின்சாரத்தை தருகிறார்கள். இதனால், மீதமுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் காசு கொடுத்து வெளியே இருந்து வாங்க வேண்டியுள்ளது. அதனால், மின்துறைக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் திட்டத்தின் மூலம் 27 ஆயிரம் மின் இணைப்புகளும், இயல்பாக 60 ஆயிரம் மின் இணைப்புகளும் என மொத்தம் 87 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதனால், அலுவலகத்தில் இருந்தே வீட்டின் மின் அளவீட்டை கணக்கிட முடியும். பணம் கட்டாத பட்சத்தில் மின்சாரத்தை துண்டிக்கவும் முடியும். மின் துறைக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீட்டு கடனாக வாங்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்புக்கு மின்சார மீட்டர்கள் தட்டுப்பாடு வெளியே கடைகளில் மீட்டரை வாங்கி கொடுத்தால் மின் இணைப்பு தினமணி செய்தி

அரக்கோணம் நகரில் மின்சார மீட்டர்கள் விநியோகம் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டதால், புதிய இணைப்பு கோரி மனு செய்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் நகரம் சென்னையின் புறநகராக மாறி வருகிறது. நகரைச் சுற்றி பல பகுதிகளில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. வீட்டு உரிமையாளர்கள் மின் இணைப்புக்கு விண்ணப்பித்து அதிகாரிகளிடம் உத்தரவு பெற்ற நிலையில் மின் பயன்பாட்டு கணக்கீட்டு மீட்டர்கள் இல்லாததால் இணைப்புகள் அளிக்கமுடியவில்லை.
கடந்த 03.09.2015 முதல் அரக்கோணம் கோட்டத்தில் மின்சார மீட்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டு விட்டதாக மின்வாரியத்தினர் தெரிவித்தனர். எப்போது மீட்டர் விநியோகம் செய்யப்படும் எனக்
கேட்டால் தங்களுக்குத் தெரியாது, வந்தால் தருவோம் என மின்வாரிய அலுவலகத்தில் பதில் தெரிவிக்கின்றனர்.
மின் இணைப்புக்கு, மீட்டருக்கான தொகைகளைக் கட்டி இரு மாதங்களான நிலையிலும் மீட்டர் விநியோகம் தொடக்கப்படவில்லை. ஆனால் வணிக மும்முனை இணைப்புகளுக்கான மீட்டர் விநியோகம் மட்டும் நடைபெறுகிறது. வீடுகளுக்கு தர வேண்டிய ஒருமுனை இணைப்புக்கான மீட்டர் நிறுத்தப்பட்டதால் அவசரத்துக்கு வீடுகளுக்கு இணைப்பு தேவைப்படுவோர் தேவையே இல்லாமல் மும்முனை இணைப்பை அதிக வைப்புத் தொகை செலுத்தி பெற்றுக் கொள்கின்றனர். இதனால் மின்நுகர்வோருக்கு வீண் செலவாகிறது.
இது குறித்து மின்வாரியத் தலைமைப் பொறியாளர் பெருமாள்சாமியிடம் கேட்டதற்கு கூறியதாவது:

தொழிற்சாலை, ஜவுளி ஆலைகளுக்கு 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்' தயார் ( தினமலா் )


தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர்' பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, தொழிற்சாலை, ஜவுளி ஆலை, ஐ.டி., நிறுவனங்கள் என, 8,200 உயரழுத்த மின் இணைப்புகள் உள்ளன.
முறைகேடு:

இவற்றில், தற்போது, 'டைம் ஆப் டே' என்ற மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டரில் ஒவ்வொரு, 15 நிமிடமும் பயன்படுத்திய மின்சார அளவு பதிவாகும்.உதவி பொறியாளர், மாதந்தோறும், நேரடியாக சென்று, மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பார். ஏழு நாட்களுக்குள், மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், மின் வாரிய அதிகாரிகள் மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கும் போது, நுகர்வோருடன் கூட்டு சேர்ந்து, முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, 'ரேடியோ பிரிக்யூன்சி மீட்டர்' பொருத்த முடிவு செய்யப்பட்டது.இந்த மீட்டரில், 'சிம் கார்டு' பொருத்தப்படும். ஊழியரிடம், 'ரிமோட்' கருவி வழங்கப்படும்.அதை அவர், ஒரு தெருவிற்குள் எடுத்து சென்றால், அங்கு வசிப்பவர்கள் பயன்படுத்திய மின்சார அளவு, அவர்களின் மீட்டரில் இருந்து, அதிர்வலை மூலம் நேரடியாக கருவியில் பதிவாகும்.
பின், அலுவலகம் சென்று, கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யலாம். இதை, சோதனை செய்த போது, பல பிரச்னைகள் ஏற்பட்டன.இதையடுத்து, உயரழுத்த மின் இணைப்பில், ஆட்டோமேட்டிக் ரீடிங் மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.

சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் சோதனை ( தினமணி செய்தி )

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் சார்பில் சென்னையில் மூன்று இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்களின் சோதனை தொடங்கியது.
 சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்த மீட்டர்களும், அவற்றுக்குத் தேவையான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் நல்ல முறையில் செயல்படுவதாகத் தெரிந்தால் மட்டுமே, உயர் மின் அழுத்த நுகர்வோர், வணிக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 துல்லியமான மின் கணக்கீடு, மின் பயன்பாட்டை வீடுகளுக்குச் செல்லாமலே கணக்கிடுவது, கட்டணத்தைச் செலுத்தத் தவறும் நுகர்வோரின் மின் இணைப்பை அலுவலகத்தில் இருந்தபடியே துண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மேற்கொள்ளலாம்.
 அடுத்த மூன்று மாதங்களுக்கு இவற்றின் பயன்பாடு கண்காணிக்கப்படும். இந்த மீட்டர்களின் உற்பத்தியாளர்கள் கூறும் அனைத்தும் நடைமுறையில் சாத்தியமானால் மட்டுமே மேற்கொண்டு பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்டமாக உயர் மின் அழுத்த நுகர்வோர், வணிக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...