2 யூனிட்டுகளில் பாய்லர் ரிப்பேர்.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தமிழகத்தின் மின் உற்பத்தியில் அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலமாக நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த செயல்பாட்டிற்காக ஐ.எஸ்.ஓ தரச்சான்று உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் தீ விபத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அனல் மின் நிலையத்தின் கன்வேயர் பெல்ட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனல் மின் நிலையத்தின் பழுதுகள் சரிசெய்யப்பட்ட நிலையில் அனல் மின் நிலையம் சீராக இயங்கி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை அனல் மின் நிலையத்தின் முதல் மற்றும் 3ம் யூனிட்டின் பாய்லர் பழுது காரணமாக மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவும் நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலைய பாய்லர் பழுதால் மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முதல் மற்றும் மூன்றாவது யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/15/tamilnadu-two-units-down-at-tuticorin-thermal-173461.html

No comments: