திருப்பூர் : துணை மின் நிலையத்தில் "ஸ்கேடா ' மைய பணிகள் தீவிரம்

           திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும், நவீன "ஸ்கேடா' தொழில் நுட்ப மையத்திற்கான, இயந்திரங்கள் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு, அவற்றை  பொருத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 30 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மேல் உள்ள நகரங் களில், மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ், செயற்கைக்கோள்  உதவியுடன், முழுவதும் கம்ப்யூட்டர்  மயமாக்கப்பட்ட, அதிநவீன தொழில் நுட்பத்தில் "ஸ்கேடா'  (மேல்  கட்டுப்பாடு மற்றும் விவரங்கள் சேகரித்தல் மற்றும் பகிர்மான மேலாண்மை  திட்டம்) மையம் அமைக்கப்படுகிறது. "ஸ்கேடா' மையத்தின் மூலம் மின் பகிர்மானம், மின்கசிவு, மின் துண்டிப்பு, மின் இழப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும்; ஒவ்வொரு மின் பாதையிலும் பயன் படும் மின் அளவும், ஒவ்வொரு மின் நுகர்வோர் பயன்படுத்தும் மின்  அளவீடும் தெரிந்துகொள்ள முடியும். "ஸ்கேடா' மையத்திலிருந்து, நவீன தொழில் நுட்பத்தின் மூலம், மின் "ரீடிங்' எடுத்து, பில் அனுப்பவும் முடியும். மின் பாதைகளில் ஏதாவது தடங்கல், துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக  "அலர்ட்' தகவல் கிடைப்பதோடு,  சரியான இடத்திற்கு உடனே சென்று, அதனை சீராக்கவும் இந்த தொழில்  நுட்பம் உதவுகிறது. திருப்பூர், மின் பகிர்மான வட்டத்துக்கு, சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் மூலம், நவீன தொழில் நுட்ப மையம், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. அதிகாரிகள் கூறியதாவது: கட்டுமான பணி முடிந்து, தளவாடங்கள் பொருத்தும் பணி நடந்து வருகின்றன.  பெல்ஜியத்திலிருந்து, மையத்துக்கான இயந்திரங்கள் வந்துள்ளன. அந்நாட்டின் பொறியாளர்கள், இயந்திரத்தை பொருத்தி வருகின்றனர்; இம்மாத இறுதிக்குள் பணி நிறைவடையும், என்றனர்.

No comments: