என்.எல்.சி மூலம் தமிழ்நாட்டுக்கு 617 மெகாவாட் கூடுதல் மின்சாரம் : என்.எல்.சி சேர்மன் அறிவிப்பு



 என்.எல்.சி மூலம் தமிழ்நாட்டுக்கு 617 மெகாவாட் கூடுதல் மின்சாரம் : என்.எல்.சி சேர்மன் அறிவிப்பு
நெய்வேலி, ஏப்ரல் 02 (டி.என்.எஸ்) நெய்வேலி என்.எல்.சி மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 617 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று என்.எல்.சி சேர்மன் சுரேந்தர் மோகன் கூறியுள்ளார்.

இது குறித்து சுரேந்தர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:

நிறைவு பெற்ற 2012-13ம் நிதியாண்டில், என்.எல்.சி. நிறுவனம், 1990 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. 2 கோடியே, 61 லட்சத்து 97 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்து, தனது 56 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் புதிய சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனம், நெய்வேலியில் 3, ராஜஸ்தான் மாநிலம் பர்சிங்சரில் 1 என மொத்தம் 4 திறந்தவெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை செயல்படுத்தி வருகிறது. இச்சுரங்கங்கள், ஆண்டிற்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


அதுபோன்று, நெய்வேலியில் 3, பர்சிங்சரில் 1 என, மணிக்கு சுமார் 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் (2740 மெகாவாட்) மின் சக்தி உற்பத்தி செய்யும் 4 அனல் மின் நிலையங்களை இயக்கி வருகிறது. மின்சக்தி ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், இந்நிறுவனத்தின் அனல்மின் நிலையங்கள் கடந்த நிதியாண்டில் 1684 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி மேற்கொண்டு, நிறுவன வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளன.

அத்துடன், நெய்வேலி 2-ம் அனல் மின் நிலையம் மற்றும் முதல் அனல் மின் நிலைய விரிவாக்கம் ஆகிய மின் நிலையங்களில் முறையே, 945 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் யூனிட் மற்றும் 303 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2-ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் முதல் மின் உற்பத்திப் பிரிவில், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதுடன், 2-வது பிரிவில் எந்திரங்களை நிர்மாணிக்கும் பணிகள், அந்த மின் நிலையத்தினை அமைத்து வரும் பாரத மிகுமின் நிறுவனத்தால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் உற்பத்திப்பிரிவில், இவ்வாண்டு டிசம்பர் மாதமும், 2-வது பிரிவில் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதமும் வர்த்தக ரீதியாக மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து என்.எல்.சி. அமைத்துவரும் நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையத்தில், கட்டுமானப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இம்மின் நிலையத்தின் முதல் மின் உற்பத்திப் பிரிவில் இவ்வாண்டு டிசம்பர் மாதமும், 2-வது பிரிவில் 2014-ம் ஆண்டு மார்ச் மாதமும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.எல்.சி. நிறுவனம், தற்போது பழுப்பு நிலக்கரி மட்டுமல்லாது பிற எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கும் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. அனைத்து துறைகளிலும் சிறப்பான மேம்பாட்டைப் பெற்று வரும் இந்நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டங்களின் மூலம் மொத்த மின் உற்பத்தி 4700 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

தூத்துக்குடி மற்றும் என்.எல்.சி விரிவாக்கம் மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டுக்கு 617 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்.

இவ்வாறு சுரேந்தர்மோகன் கூறினார். (டி.என்.எஸ்)

No comments: