ஈராண்டில் இணையில்லாத திட்டங்கள்... மின் மிகையை நோக்கி தமிழகம் ( dinamani NEWS )


அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஈராண்டு காலத்தில் மின்சார தட்டுப்பாட்டைப் போக்க எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்வெட்டை அறவே போக்கி மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதோடு மட்டுமன்றி, மின்சாரத்தில் மிகை மாநிலமாக மாற்றும் வகையில் ஏராளமான புதிய திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன்,

பழுதடைந்த மின் உற்பத்தி நிலையங்களைச் சரிசெய்யும் பணியை துரிதப்படுத்தியதன் காரணமாக கடந்த ஓராண்டாக மாநிலத்தின் மின் உற்பத்தி உயர்ந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை நிலையற்ற காற்றாலை மின் உற்பத்தியைத் தவிர்த்து, பிற நிலையான மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் சராசரியாக 7 ஆயிரம் மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இப்போது சராசரி மின் உற்பத்தி அளவு 8 ஆயிரம் மெகா வாட் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
2 ஆண்டுகளில் கூடுதல் மின் உற்பத்தி: பழுதுகள் சரிசெய்யும் பணிகள் மட்டுமல்லாமல், புதிய திட்டங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் இருந்த மேட்டூர் அனல் மின்நிலைய விரிவாக்கப்பட்ட 3- வது யூனிட், வடசென்னை இரண்டாவது நிலையில் உள்ள 2- வது யூனிட், வல்லூர் அனல் மின் நிலைய 2- வது யூனிட் ஆகியவற்றில் சில மாதங்களாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தீவிர நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 606.5 மெகாவாட் அளவுக்கான மின்சார உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால் கடந்த இரு மாதங்களாக மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி எப்போது இல்லாத அளவுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியுள்ளது.
மின் மிகை இலக்கை நோக்கி... மின் உற்பத்தியில் தன்னிறைவு மட்டுமன்றி எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றும் வகையில் ஏராளமான புதிய மின் உற்பத்தித் திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பெறப்பட்டு பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோல் உடன்குடி அனல் மின் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் தலா 800 மெகா வாட் திறனுடன் இரண்டு யூனிட்டுகளைக் கொண்ட மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ரூ. 7,000 கோடி மதிப்பில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
இப்போது போதிய மின் கட்டமைப்பு மற்றும் தொடரமைப்புகள் இல்லாததால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாக பெற முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையை மாற்றவும், எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டும் மின் கட்டமைப்பு மற்றும் தொடரமைப்பை வலுப்படுத்த ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் ஒன்றை தமிழக அரசு தயாரித்துள்ளது.
இதில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவி மூலம் ரூ. 2,750 கோடி மதிப்பில் ஐந்து புதிய 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்குரிய மின்தொடர் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ. 2,300 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து சென்னைக்கு 1,488 சுற்று கிலோ மீட்டர் நீளத்துக்கு 400 கிலோ வோல்ட் மின் தொடர்பாதை அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முன்னிலை... காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிப்பதுபோல், சூரிய சக்தி மின் உற்பத்தியிலும் முன்னிலை பெறும் வகையில் மாநிலத்தின் சூரிய மின்சக்தி கொள்கையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மூன்றாண்டுகளில் 3,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டு மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பயனாளிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் 30 சதவீத மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசின் சார்பில் உற்பத்திச் சார்ந்த ஊக்கத் தொகையும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ வாட் மின்சாரத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதலீட்டு மானியம் தமிழக அரசிடமிருந்து கிடைக்கும் என சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் கிடைக்கும் என்பதோடு தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்பதிலும் சந்தேகமில்லை.

1 comment:

chari said...

போர்கால நடவடிக்கை எடுத்த தமிழ்னாடு முதல்வருக்கும், இந்த அரசுக்கும் நன்றி..