"தனியார் நிறுவன மின் கொள்முதல் குறைக்கப்படும்' - dinamalar.


சென்னை : ""தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மின் கொள்முதல் குறைக்கப்படும்,'' என, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேல், ""கூடுதல் நேர மின் தடையால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.



மின் தடையால், தொழில் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எதிர்கால தேவையை கருதி,
புதிய மின் திட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இருப்பினும், முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு, 10 ஆண்டுகளாகும்,'' என்றார். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:



புதிய மின் திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வர, பல கட்ட அனுமதி பெற வேண்டி உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின் பிரச்னை தற்காலிகமானது. இப்பிரச்னையை சமாளிக்க தான், தனியார் மின் நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது, தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படும்
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: