தமிழகத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி ஒன்பது ஆண்டுகளுக்கு பின் 2012 ஏப்ரல் 1ம் திகதி முதல், மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் திகதிக்குள் மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை மின் வாரியங்கள் சமர்பிக்காவிட்டால் அந்தந்த மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் தாங்களே முன்வந்து மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை 2011ல் பிறப்பித்தது.
இதன்படி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2013 -14ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரையை பிப்ரவரி 19ம் திகதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சமர்ப்பித்தன.
அதனுடன் 81 நாள் தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், மின் கட்டணம் மாற்றியமைப்பதற்கான மனு மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன.சென்னையில், மே 3ம் திகதியும் திருச்சியில் மே 8ம் திகதியும் மதுரையில் மே 10ம் திகதியும் கோவையில் மே 17ம் திகதியும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இதில், முதலாவது பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் இன்று காலை 10:00 மணியிலிருந்து சென்னை எஸ்பிளனேடிலுள்ள தமிழிசை சங்க கட்டத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி, மின்வாரியம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதால், மின்கட்டணம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கைகள் வழக்கமானது தான். ஒரு வேளை மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் அதனை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். |
No comments:
Post a Comment