புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை


சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.சட்டப்பேரவையில் புதனன்று (மே 14) சட்டமன்றம், ஓய்வூதியம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக் கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசியது வருமாறு: விடுதலைப்போராட்ட வீரர்கள், இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியத்தை மற்றவர்களுக்கெல்லாம் உயர்த்தியதை போல் உயர்த்த வேண்டும். தியாகிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவமனைகள் ஏ வகுப்பு பிரிவில் சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும். அவர்களுக்கான மருத்துவப்படியை உயர்த்தி வழங்கவேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்கு விடுதி கட்டிடம் கட்டும் ஏற்பாட்டை அரசு துவக்கியுள்ளது.


அதுவரை அவர்கள் தங்கிச் செல்வதற்கு தற்போதுள்ள விடுதியில் ஒரு அறையை ஒதுக்கவேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கு முன்னாள் அரசு அதிகாரிகளுக்கான அதே கட்டணத்தை வசூலிக்கவேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்தில் செல்ல பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயிலில் செல்ல ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கவேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கவேண்டும். வேண்டுமென்றால் அரசு ஊழியர்களை போல் ஒரு தொகையை இதற்கு பிடித்தம் செய்து கொள்ளலாம். இது அரசுக்கும் உறுப்பினர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தலாம். அவர்களின் ஒய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி ஒதுக்கும்போது யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமையை சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கவேண்டும். சட்டமன்ற உதவியாளர்களுக்கு தற்போது ரூ.2500 தரப்படுகிறது. உதவியாளர்ளை அரசே வழங்குவது பொருத்தமாக இருக்கும். அப்படி அரசே நியமிக்கும்போது அவர்களின் படியையும் உயர்த்தி தர வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள மிக மோசமான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதி படி ரத்து செய்யவேண்டும். தமிழ்நாட்டில் தற்போது 7.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். ஆனால் அதற்கேற்ற பணியிடங்கள் கருவூலங்கள் இல்லை. 

ஓய்வூதியம் பெறப்போகும் போது ஓய்வூதியர்கள் கடுமையான சிரமத்தை சந்திக்கிறார்கள். உதாரணத்திற்கு சென்னையில் 36 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் இருந்த போது 84 பணியாளர்கள் இருந்தார்கள் இப்போது ஒரு லட்சம் ஒய்வூதியர்கள் இருக்கும் போது 36 பணியாளர்கள் தான் உள்ளனர். ஆகவே இந்த பணியாளர்களை அதிகப்படுத்தவேண்டும். அரசாணை 371ன் படி 1988க்குபிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அமுலாக்கிட வேண்டும். ஒய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், முன்னாள் கிராம அலுவலர், ஊராட்சி உதவியாளர் ஆகியோருக்கு இதர அரசு ஊழியர் களைபோல வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்ரூ.3500 வழங்கவேண்டும். முதல்வர் அறிவித்த தேர்தல் வாக்குறுதி படி மூத்த குடி மக்களுக்கு பேருந்து பயணச் சலுகை வழங்கவேண்டும். சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்பாடி பணியாளர்களுக்கு நான்காம் பிரிவு ஊழியர்களை போலவே ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு பெறுகிறார்கள். அவ்வாறு பதவி உயர்வு பெறும் போது ஓய்வூதியம் கிடைக்க தொகுப்பூதிய பணியில் 50 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒய்வூதியர்கள்,குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் வாழ்வுச் சான்று அளிக்க நேரில் வரவேண்டும் என்ற நிபந்தனை உண்டு. அது அவசியம் தேவை. இந்தாண்டு கூட இவர்கள் நேரில் வரும் போது கருவூலங்களில் போதிய ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலமாதங்கள் ஒய்வூதியமே பெறமுடியாத நிலை ஏற்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்: ஓய்வூதியதாரர்கள் வசதிக்கேற்ப ஊழியர்கள் இல்லாத அலுவலகம் குறித்து உறுப்பினர் குறிப்பிட்டுச் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அ.சவுந்தரராசன்: ஓய்வூதியம் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக நான் சொல்லவேயில்லை. வாழ்வுச் சான்று பெறுவதற்கு ஒவ்வொறு ஆண்டும் நேரில் வரவேண்டியுள்ளது. வரும் போது அந்த நாளிலேயே எல்லோருக்கும் சான்று வழங்குவதால் ஓய்வூதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஒரு மாதம் அல்லது இரண்டுமாதங்கள் கழித்து பெறவேண்டியுள்ளது.

இதில் உள்ள சிரமங்களை அரசு களைய வேண்டும். எனவே வாழ்வுச் சான்றிதழ் பெறுவதற்கு அங்காங்கே உள்ள வி.ஏ.ஓ, நோட்டரி பப்ளிக் என இரண்டு மூன்று பேரை நியமித்து இவர் உயிரோடு இருக்கிறார் என்ற சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். அல்லது அவர்கள் ஒய்வூதியம் பெறுகிற வங்கி மேலாளர் இவர் உயிரோடு இருக்கிறார் என்ற சான்றிதழ் வழங்கினால் போதும் என்ற ஏற்பாட்டை செய்தால் அரசுக்கும் சுமை குறையும் அவர்களுக்கும் உரிய காலத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். இது தான் என்னுடைய ஆலோசனை. நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்: உறுப்பினர் கூறிய யோசனை முதல்வர் பரிசீலனையில் உள்ளது. விரைவில் உறுப்பினர் மகிழத்தக்கவகையில் அறிவிப்பு வெளியாகும். அ.சவுந்தரராசன்: ஓய்வூதியதாரர்களுக்கு அரசு ஊழியரை போல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதை நடைமுறைபடுத்தும் போது குடும்ப உறுப்பினர்களும் சிகிச்சை பெறும் வசதியை செய்து தர வேண்டும். இ.பென்சன் திட்டத்தின்படி ஓய்வூதியதாரர்கள் பற்றியவிவரங்களை மின்னணு முறையில் சேகரித்து வைப்பது மிகமிக அவசியமானது. இது ஏராளமான குளறுபடிகளை முறைகேடுகளை களைய பயன்படும். ஆனால் அதே நேரத்தில் முழுமையடையாத நிலையில் இதனை அமலாக்கினால் ஓய்வூதியம் உரிய நேரத்தில் பலருக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். எனவே எல்லாவிவரங்களையும் முழுமையாக சேகரித்த பிறகே இதனை அமல்படுத்தவேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1.5 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். தற்போது சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்புக்கு வரவேண்டும் என்றால் விருந்தினர் மாளிகை வழியாக அல்லது பெரியார் சிலையை சுற்றி வர வேண்டியுள்ளது. வாகனம் இல்லாதவர்கள் விடுதிக்குள் வருவதில் பெரும் சிரமம் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது சட்ட மன்ற உறுப்பினர்கள் விருந்தினர் மாளிகை வழியாக குடியிருப்புக்கு போக அனுமதி மறுக்கிறார்கள். இந்த பிரச்சனையில் பேரவைத்தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைத்து உறுப்பினர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்து கிறது. அமைச்சர் பன்னீர்செல்வம்: உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. வாகன அடையாள சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதை காண்பித்தாலே காவல்துறையினர் உரிய மரியாதை தந்து வழிவிடுவார்கள். அ.சவுந்தரராசன்: சில நேரங்களில் அடையாள அட்டை ஒட்டாத காரில் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்போது பெரிய பிரச்சனையாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்போட்டி நடைபெறும் போது சட்டமன்ற வளாகத்திற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்துகிறார்கள். அதை ஒழுங்குபடுத்தவேண்டும். அமைச்சர் பன்னீர்செல்வம்: சட்டமன்ற வளாகத்தில் முறையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படும். சட்டமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து பெல்ஸ்ரோடு, அண்ணாசாலைக்கு நேரடியாக செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500 என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3050ஆக உள்ளது. இந்த ஓய்வூதியத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டமன்ற அலுவலகத்தில் பணியாற்றுகிற ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தையும் உயர்த்திவழங்கவேண்டும். சட்டமன்ற காவலர்களின் படியையும் உயர்த்தி வழங்கவேண்டும். நாடாளுமன்ற அவைக்குள் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு சமமாக சட்டமன்றத்திற்குள் பணியாற்றுகிற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவேண்டும். சட்டமன்ற விடுதிக்குள்ளே நாய், எலி,. கரப்பான் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளன. சுற்றுப்புறத்தை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதில் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும். சட்டமன்ற வளாகத்திற்குள் நிறைய மரங்கள் பட்டுப்போயுள்ளது. அங்கேயே பல நூற்றுக்கணக்கான மரங்களை நட வாய்ப்பு உள்ளது. அதையும் வேகப்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments: