புதிய மின்கட்டண உயர்வு குறித்த ஆணையத்தின் முடிவு : அடுத்தமாதம் வெளிவரும் ( தினமலர் )


மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், எதிர்ப்பையும் மீறி, 2012, ஏப்ரல், 1ம்தேதி முதல், மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட, 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டணம் சரியான நேரத்தில் உயர்த்தப்படாததால், மின்வாரியங்கள், பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், 1ம் தேதிக்குள், மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இவ்வாறு, மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை, மின் வாரியங்கள் சமர்பிக்கா விட்டால், அந்தந்த மாநில, ஒழுங்குமுறை ஆணையங்கள், தாங்களே முன்வந்து, மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மத்திய மின்சார தீர்ப்பாயம், அதிரடி உத்தரவை, 2011ல் பிறப்பித்தது.

இதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013 - 14ம் ஆண்டுக்கான, மின் கட்டண உயர்வு பரிந்துரையை, தமிழக மின் வாரியம் சமர்ப்பித்தது. மத்திய மின் தீர்ப்பாய உத்தரவின்படி, தமிழக மின் வாரியம், மின் கட்டண உயர்வு பரிந்துரையை, நவம்பர், 30ம் தேதியிலேயே, ஒழுங்குமுறை ஆணையத்திடம், சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், சமர்பிக்கவில்லை.அதன்பின், ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின்பேரில், பிப்ரவரி, 19ம் தேதி, மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சமர்ப்பித்தன. அதனுடன், 81 நாள் தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதை தொடர்ந்து, மின் கட்டணம் மாற்றியமைப்பதற்கான மனு மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான அறிப்பை, மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன. சென்னையில், மே, 3ம் தேதியும், திருச்சியில், மே, 8ம் தேதியும், மதுரையில், மே, 10ம் தேதியும், கோவையில், மே, 17ம் தேதியும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.
"முழு அளவில் மின்சாரம் வழங்காமல், மின் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதா?' என, பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, கோவையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள், மின் வாரிய அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நான்கு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில், 130 பேரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் தரப்பில் இருந்து பெற்ற கருத்துகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து, இறுதியாக மின் கட்டண உயர்வை, ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என கூறப்படுகிறது. அதில், மின்தேவை குறித்து மக்கள் எதிர்பார்ப்பு என்ன என்ற கருத்து, அரசுக்கு தெரியப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டில் மின் கட்டண உயர்வு இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.


அரசே மானியமாக வழங்கும்...!

குடிசை மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் உயர்வு முழுவதும், தமிழக அரசிடமிருந்து, மானியமாக பெறப்படும் என, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click