குத்தாலம் எரிவாயு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரப் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோல் பழுதடைந்துள்ள வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலைய இரண்டாவது யூனிட்டிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 516 மெகா வாட் மின் உற்பத்தி திறன் அளவுக்கு இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
இதில் நாகை மாவட்டம் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 101 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஒரே யூனிட் இயந்திரப் பழுது காரணமாக கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.

இதுபோல் ராமநாதபுரம் வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் 92.2 மெகா வாட் திறன் கொண்ட இரண்டாவது யூனிட்டில் கடந்த 23-ஆம் தேதி இயந்திரப் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டது. இந்த பழுதுகள் காரணமாக 200 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இருந்தபோதும், காற்றாலை மின் உற்பத்தி 3000 மெகா வாட் அளவுக்கு உயர்ந்ததால், மின் பற்றாக்குறை பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை என்கின்றனர் மின் வாரிய அதிகாரிகள்.
இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் சிறிய பாதிப்புதான் ஏற்பட்டது. பேரிங் பழுதடைந்தது. இந்த பழுது உடனடியாக சரி செய்யப்பட்டு இப்போது வெள்ளிக்கிழமை இரவுமுதல் மின் உற்பத்தி மீண்டும் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல் வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் பழுதுகள் சரி செய்யப்பட்டுவிட்டன.
சனிக்கிழமை இரவே இயந்திரம் இயக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
அனல் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் தொடர்ந்து அதிக அளவில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 3,300 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. அதை முழுவதுமாக மின் வாரியம் பெற்றுக்கொண்டது. எனவே, மின் வெட்டு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றார்.

No comments: