நடப்பாண்டு இழப்பு எதிர்பார்ப்பு ரூ.9,327 கோடி! * மின் வாரிய இயக்குனர் தகவல்

கோவை:பல்வேறு திட்டங்களுக்கு, சேவை அடிப்படையில், மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது, என, மின் வாரிய இயக்குனர் (நிதி) ராஜகோபால் தெரிவித்தார்.

கோவையில் நடந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர்ராஜகோபால் பேசியதாவது:மின் வாரியத்தின் மொத்த இழப்பு, 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. கடந்தாண்டு (2012 -2013) 13,300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு எதிர்பார்க்கப்பட்டது. மின் இழப்பை ஈடுகட்ட, மின் கட்டண உயர்வுக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 7,900 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.


கடந்தாண்டின் தணிக்கை அறிக்கை முடிந்த பின், துல்லியமான இழப்பு தெரியும். நடப்பாண்டு (2013-2014), 10,300 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடிசைகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் மூலம், 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.விவசாய மின் இணைப்பால், 859 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்விரு இழப்புக்காக, 973 கோடி ரூபாய் அரசிடம் இருந்து பெறப்படும். மீதமுள்ள, 9,327 கோடி ரூபாய் இழப்புக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

அதனால், குடிசைகளுக்கான மின் இணைப்பு ஒன்றுக்கு, அரசிடம் இருந்து, மாதத்துக்கு, 60 ரூபாயும், விவசாய மின் இணைப்புக்கு, ஒரு எச்.பி.,க்கு, மாதத்திற்கு, 1,750 ரூபாயும் பெறப்படுகிறது. குடிசை மின் இணைப்புக்கு, 125 ரூபா யாகவும், விவசாய மின் இணைப்பில், ஒரு எச்.பி.,க்கு, 2,500 ரூபாயாகவும் உயர்த்த, ஒழுங்குமுறை ஆணையத் திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மின் வாரியம் மூலம் உயர் மின் பாதையில் (எச்.டி.,) 15 ஆயிரம் மில்லியன் யூனிட், தாழ்நிலை மின் பாதையில் (எல்.டி.,) 28 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது.ஒரு யூனிட் மின்சாரத்துக்கு, ஏழு ரூபாய் செலவாகிறது. எல்.டி., பாதையில் உள்ள குடிசை, குடியிருப்பு, விவசாயம், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வழங்கும் போது, யூனிட்டுக்கு, 3.80 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இழப்பு ஏற்படுகிறது.

எச்.டி., பாதையில் உள்ள தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், உயர்ரக கல்வி நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கும் போது, ஒரு யூனிட்டுக்கு, ஏழு ரூபாய் கிடைக்கும். இதனால், இழப்பு ஏற்படாது. ஆனால், அரசின் சேவை, மானிய அடிப்படையிலான திட்டங்களுக்கு, எல்.டி., இணைப்புக்கு, மின்சாரம் அதிகம் வழங்க வேண்டியுள்ளதால், மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு, தவிர்க்க முடியாததாக உள்ளது.இவ்வாறு, ராஜகோபால் தெரிவித்தார்.
http://tamil.yahoo.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%8E-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0-9-185600917.html

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click