தூத்துக்குடி அனல் மின்நிலையம்.. தொடரும் பாய்லர் பழுது- மின் உற்பத்தி மீண்டும் பாதிப்பு!


தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டின் பாய்லரில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்உற்பத்தியில் பாதிக்கப்பட்டிருக்கிறது.. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 210மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலைய மின்உற்பத்தி யூனிட்டுகள் அடிக்கடி பழுதாகுவதும், மின்உற்பத்தி பாதிக்கப்படுவதும் வாடிக்கையாவிட்டது. கடந்த 8ந் தேதி தான் முதலாவது யூனிட்டின் பாய்லரில் பழுது ஏற்பட்டது. இந்த பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி சீராக நடந்து வந்த நிலையில், நேற்று இரவு மூன்றாவது யூனிட் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த யூனிட்டிற்கு நிலக்கரி கொண்டுவரும் பாதையிலும் பழுது ஏற்பட்டுள்ளது. பாய்லர் பழுது, நிலக்கரி கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலைய பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டின் நேரம் அதிகரித்து வரும் சூழலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் பழுதானது மின்வெட்டை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறையால் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக பாய்லர்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/05/10/tamilnadu-fault-boiler-tuticorin-thermal-station-hits-power-175037.html

No comments: