மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 லட்சம் கோடி முதலீடு:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்...


புதுடில்லி:நாடு தழுவிய அளவில், மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், மத்திய அரசு, நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாட்டின் மின் உற்பத்தி திறனை, 3.15 லட்சம் மெகா வாட்டாக அதிகரிக்கும் வகையில், ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, மத்திய மின் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார்.

பகிர்மானம் :நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின், முதல் நிதிஆண்டான, கடந்த 2012-13ல், கூடுதலாக, மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, கடந்த நிதியாண்டிலிருந்தே, மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில், முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மின் துறையை பொறுத்தவரை யில், மின் உற்பத்தி, பகிர்மானம், வினியோகம் போன்றவற்றிற்காக, முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில், மின் உற்பத்திக் கான எரிபொருளுக்கான தட்டுப்பாடு, திட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


குறிப்பாக, நாடு தழுவிய அளவில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி இல்லாததால், பல மாநிலங்களில், கடும் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், உற்பத்தியாகும் மின்சாரத்தை, எடுத்துச் செல்ல, போதிய அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மின் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இலக்குநாடு சுதந்திரமடைந்த, 1947ம் ஆண்டில், நாட்டின் மின் உற்பத்தி திறன், வெறும், 1,625 மெகா வாட் என்ற அளவில்தான் இருந்தது. இது, 1991ம் ஆண்டில், 65 ஆயிரம் மெகா வாட்டாகவும், கடந்த 2012-13ம் நிதியாண்டில், 2.28 லட்சம் மெகா வாட்டாகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017), நாட்டின் மின் உற்பத்தி திறனை, 315 ஜிகா வாட் அல்லது 3.15 லட்சம் மெகா வாட்டாக உயர்த்தும் வகையில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டு செலவு:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மட்டும், நாட்டின் மின் உற்பத்தி திறனை கூடுதலாக, 88 ஜிகா வாட்டாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆண்டுக்கு சராசரியாக, கூடுதலாக, 17 ஜிகா வாட் என்ற அளவில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், கூடுதலாக, 17 ஜிகா வாட் அளவிற்கு மின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு உள்ளது.நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மின் உற்பத்தி திறன் அதிகரிப்பதற்காக, திட்டமிடப்பட்டுள்ள ஐந்து லட்சம் கோடி முதலீட்டு செலவில், அனல் மின் திட்டங்களுக்காக, ஒரு மெகா வாட் மின் உற்பத்திக்கு, 5 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடு தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
அனல் மின் திட்டம்:இது, நீர்மின் திட்டத்திற்கு, 8.50 கோடி ரூபாய் என்ற அளவிலும், அணு மின் திட்டத்திற்கு, 11 கோடி ரூபாய் என்ற அளவிலும் செலவிட வேண்டியிருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், அனல் மின் திட்டங்கள் வாயிலாக, கூடுதலாக, 67 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நீர்மின் திட்டங்கள் மூலம், 10 ஜிகா வாட்டும், அணு மின் திட்டங்கள் வாயிலாக, 5-6 ஜிகா வாட் அளவிற்கும் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, ஜோதிர்ஆதித்ய சிந்தியா மேலும் கூறினார்.

No comments: