"டிசம்பருக்குள் மின்வெட்டே இருக்காது' ; மின்பகிர்மான கழக இயக்குனர்


மதுரை : ""வரும் டிசம்பருக்குள் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு, மின்வெட்டு அறவே இல்லாத நிலை உருவாகும்,'' என மின்பகிர்மானக் கழக இயக்குனர் ராஜகோபால் தெரிவித்தார்.மதுரையில் மின்சார ஒழுங்கு முறை ஆணைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில், மின்பகிர்மானக் கழக இயக்குனர் ராஜகோபால் பேசியதாவது:
தமிழகத்தில் அனல் மின்நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. புனல் மின்நிலையங்கள், பருவமழை பொய்த்ததால் செயல்படவில்லை. இதனால் 3 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 


வடசென்னையில், யூனிட்2ல் 1200 மெகாவாட் மின்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. முதல் யூனிட்டும் விரைவில் செயல்பட உள்ளது. மேட்டூரில், நவம்பரில் 2 யூனிட்டுகள் உற்பத்தியில் இறங்கும். இதுதவிர வல்லூரில் தலா 500 மெகாவாட்டில், முதல் யூனிட் உற்பத்தி துவங்கிவிட்டது. மேலும் 2 யூனிட்டுகள் விரைவில் செயல்பட உள்ளன. தூத்துக்குடியில் 2 யூனிட்கள் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் செயல்படும். இவ்வாறு இந்தாண்டு இறுதிக்குள் 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 



நமது உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி 4000 மெகாவாட், ஜூன் முதல் படிப்படியாக சரிசெய்யப்பட்டு இந்தாண்டு இறுதிக்குள், மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்படும். தமிழக அரசு, சோலார் மூலம், முதற்கட்டமாக 1000 மெகாவாட் உற்பத்திக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. மீதியுள்ளவற்றிற்கு ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படும். மேலும் உடன்குடியில் 2 யூனிட், எண்ணூரில் 3 யூனிட் என தலா 660 மெகாவாட் மூலம் 3300 மெகாவாட் உற்பத்திக்கு ஒப்பந்தம் கோரியுள்ளோம். எனவே வருங்காலத்தில் தேவை பூர்த்தி செய்யப்படும்.


தமிழகத்தில் 4.20 லட்சம் குடிசைகளில் குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல்., பல்புகள் வழங்க, ரூ.12 கோடி மானியம் கொடுக்கப்படும். இத்திட்டத்திற்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதுதவிர சோதனை ஓட்டமாக, விழுப்புரம், கன்னியாகுமரி மாவட்டங்களில், வீடுகள் தோறும் 2 குண்டுபல்புகளை மாற்றி, ரூ. 60க்கான சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும். இதற்கு ரூ.45 அரசு மானியமாக வழங்கும். 


மின்இழப்புகளை பொறுத்தவரை, அது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இழப்பை தவிர்க்க, ஆண்டுதோறும் 100 துணைமின் நிலையங்கள் உருவாக்குகிறோம். தற்போது 100 நகரங்களில் மின்இழப்பை 15 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர ஒப்பந்தம் போட்டுள்ளோம். 


மின்திருட்டை தடுக்க, அமலாக்க பிரிவுவில் 17 படைகள், ஒரு பறக்கும்படை செயல்படுகின்றன. மேலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட 40 படைகளும் செயல்படுகின்றன. இதனால் இந்திய அளவில், தமிழகத்தில் மின்திருட்டு குறைவுதான். 


மின்மீட்டர்களை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒருமுனை மின்மீட்டர் 17 லட்சத்து 5 ஆயிரமும், மும்முனை மின்மீட்டர் 75 ஆயிரமும் சப்ளை செய்யப்பட்டதால், மின்மீட்டர் தட்டுப்பாடு இல்லை. இந்த ஆண்டில் 20 லட்சம் ஒருமுனை மின்மீட்டரும், 10 லட்சம் மும்முனை மின்மீட்டர் பெற ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, மின்மீட்டர் தட்டுப்பாடு வராது. தனியாரிடம் மின்சாரத்தை, கூடுதல் விலைக்கு அரசு வாங்குவதாக கூறுகின்றனர். அது ஒப்பந்தம், தேவையின் அடிப்படையில் வாங்கப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள்நாட்டு கம்பெனிகளுக்கு வழங்குவதைப் போலவே சலுகை இன்றி வழங்குகிறோம். சென்னையில் 31 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது 181 மெகாவாட் அளவு பயன்பாடுதான். இது 2 சதவீதமே. மேலும் தமிழக அரசு மின்வாரியத்திற்க ரூ. 1900 கோடி உட்பட ரூ. 4082 கோடியை மானியமாக வழங்கிவிட்டது. 


இவ்வாறு அவர் பேசினார்.


No comments: