மின் இணைப்பு வழங்கக் கூடாது என மின்வாரியம் முன் மறியல்

:திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையம் மின்வாரிய அலுவலகம் முன், "மின் இணைப்பு வழங்கக் கூடாது,' என, மற்றொரு தரப்பினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர், பொன்கோவில் நகரில், வீடு கட்டி வசிக்கும் 57 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரி, நேற்று முன்தினம், பொல்லிகாளிபாளையம் மின்வாரிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது. நேற்று மதியம் 1.00 மணிக்கு, அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது என மற்றொரு தரப்பினர், அதே இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்கள், "சம்மந்தப்பட்ட நிலம் மற்றும் அதற்கு அருகில் ஆறு ஏக்கர் நிலம், அருணாசலம், காளியப்பன், வள்ளியப்பன், ஜெயபால் ஆகியோர் குடும்பங்களுக்கு சொந்தமானது. 2008ல் அளவீடு செய்து பார்த்தபோது, நத்தம் புறம்போக்கு நிலத்துக்கு அருகிலிருந்த எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர்.   அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது. அப்படி வழங்கினாலும், எங்கள் பெயரில்தான் வழங்க வேண்டும்,' என்று கூறினார்.அவர்களிடம் பேச்சு நடத்திய மின்வாரிய உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம்,"வீட்டு உரிமையாளர்கள் பெயருக்கே மின் இணைப்பு வழங்க முடியும்; மின் இணைப்பு எந்நேரமும் துண்டிக்கப்படும் என்ற உறுதிமொழி அடிப்படையில், இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்னையால், தாராபுரம் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

No comments: