2013 இறுதிக்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவு: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்


மின் உற்பத்தியில் தமிழகம் இந்த ஆண்டு இறுதிக்குள் தன்னிறைவு பெறும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் பேசியது:

தமிழகத்தில் இப்போது 4,000 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான தீவிர நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதிய 600 மெகா வாட் மின் உற்பத்தித் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இப்போது 400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் மொத்த உற்பத்தித் திறனான 600 மெகா வாட் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 மெகா வாட் திறன் கொண்ட முதல் யூனிட்டில் ஏற்கெனவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2-வது யூனிட்டில் (500 மெகா வாட்) விரைவில் சோதனை மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதுபோல் 3-வது யூனிட் (500 மெகா வாட்) இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
இதுபோல் வடசென்னை அனல் மின் நிலைய முதல் யூனிட்டும் (600 மெகா வாட்) விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த அனல் மின் நிலைய 2-வது யூனிட் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
இதுபோன்று அனைத்து புதிய திட்டங்களும் இந்த ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், இப்போதுள்ள 4,000 மெகா வாட் அளவு பற்றாக்குறைக்குமேல் மின் உற்பத்தி செய்யப்படும்.
எனவே, இந்த ஆண்டு இறுதியில் தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவுப் பெறும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

No comments: