தமிழகத்தில் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டில் இருப்பதால் மொத்த மின் உற்பத்தி 10 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று (மே 4) 10,615 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாத காலமாக மின் உற்பத்தி 9,000 மெகா வாட் அளவைத் தாண்டி செய்யப்பட்டு வருகிறது.காற்றாலை மின் உற்பத்தி முழுவதும் நின்றதால், உற்பத்தி சற்று குறைந்தது. மேலும் ஒரு சில அனல் மின் நிலைய யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டதால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் மின் பயன்பாடும் அதிகரித்ததால், மின் தேவையும் அதிகரித்தது.
இதனால், மாவட்டங்களில் அறிவிக்கப்படாத 7 மணி நேரத்துக்கு மேலான மின் வெட்டு மீண்டும் அமலுக்கு வந்தது. சென்னையிலும் பெரம்பூர், கொளத்தூர், அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை கூடுதல் மின் வெட்டும் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களும் பழுதுகள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், காற்றாலை மின் உற்பத்தி மூலம் 1,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தி இன்று 10,615 மெகா வாட் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதனால், மாவட்டங்களில் மின் வெட்டு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment