பாய்லர் தயாரிப்பில் ஒரே நிறுவனம் ஈடுபடுவதால்...தாமதம்! : ஜூன் மாதம் மின் சப்ளை சீராகும் என அதிகாரிகள் விளக்கம்


திருச்சி: ""பாய்லர் தயாரிக்க ஏற்படும் காலதாமதம் தான், மின் உற்பத்தியை துவங்க தாமதம் ஏற்படுகிறது. ஜூன் மாதத்திற்குப் பின், மின் வெட்டு இருக்காது,'' என, தமிழ்நாடு மின் அமைப்புகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில், நேற்று முன்தினம், திருச்சியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால், நாகல்சாமி, செயலாளர் குணசேகரன் பங்கேற்று கருத்துக்களைக் கேட்டனர்.

கூட்டத்தில், ஆணைய உறுப்பினர் நாகல்சாமி பேசியதாவது: கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதற்கு வலிமையான கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும். நஷ்டத்தை சரிசெய்ய வழிமுறைகளைக் கேட்டறிந்து, மின்வாரியத்திடம் தெரிவிக்கப்படும். அரசையும், மின்வாரியத்தையும், ஒழுங்கு முறை ஆணையத்தையும் திட்டி பேசுவதற்கான மேடை அல்ல இது.
இவ்வாறு, அவர் பேசினார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர், ராஜகோபால் பேசியதாவது: மின் உற்பத்தியை அதிகரிக்க பல திட்டங்கள் துவங்கப்பட்டு, படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வட சென்னை, மேட்டூர் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து நெய்வேலி விஸ்தரிப்பு, கூடங்குளம் ஆகியவற்றில் இருந்து கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதனால், வரும் ஜூன் மாதத்திற்கு பின், மின்வெட்டு இருக்காது. எதிர்காலத்துக்காக சோலார் மூலம், 3,000 மெகாவாட், அனல் மூலம், 3,300 வாட் உற்பத்தி செய்ய, சூப்பர் கிரிட்டிக்கல் பிளான்ட் அமைக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. அத்தியாவசிய காலங்களில் மட்டுமே, தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. 1,500 கிலோமீட்டர் தூரம் வரை, மின்சாரம் கம்பி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. எனினும் இதனால் இழப்பு என்பது, 20 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில், 31 நிறுவனங்களின் மொத்த பயன்பாடு, 181 மெகாவாட் தான். 2006-07ம் ஆண்டு வரை தமிழகத்தில் மின் தேவைக்கு ஏற்ப, மின்சாரம் கையிருப்பு இருந்தது. அதன் பிறகு பல தொழிற்சாலை, ஐ.டி.,நிறுவனம், வணிக வளாகம், ஷாப்பிங் மால் துவங்கப்பட்டதால், மின் பயன்பாடு அதிகரித்தது. 10 லட்சம் வீடுகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான பாய்லர் உள்ளிட்ட உதிரி பாகங்களை, ஒரே ஒரு நிறுவனமே தயாரித்து வழங்குகிறது. ஒரு ஆர்டர் கொடுத்தால், அதை முடித்து தர, ஐந்து முதல், ஆறு ஆண்டு வரை ஆகிறது. இதனால் தான், மின் உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அது செயல்பாட்டிற்கு வர பல ஆண்டு ஆகிறது.
இவ்வாறு, ராஜகோபால் பேசினார்.

No comments: