இயற்கை எரிவாயு விலை இரட்டிப்பாக வாய்ப்பு

             புதுடில்லி: இயற்கை எரிவாயு உள்நாட்டு விலையை, இரட்டிப்பாக்குவது குறித்து, இம்மாதம், 7ம் தேதி, அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு விவாதிக்க உள்ளது. அதில், விலையை உயர்த்த அனுமதி கிடைக்குமானால், நாடு முழுவதும், மின் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. மின் உற்பத்தி, உரத் தொழிற்சாலைகள் போன்றவற்றில், அதிக அளவில் பயன்படுத்தப்படும், இயற்கை எரிவாயுவின் விலை, பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. "மானியச் சுமையில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு, இயற்கை எரிவாயுவின் உள்நாட்டு விலையை உயர்த்த வேண்டியது அவசியம்' என, ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, ராணுவ அமைச்சர், அந்தோணி தலைமையிலான, அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, இம்மாதம், 7ம் தேதி கூடி, இயற்கை எரிவாயு விலையை உயர்த்துவது குறித்து, முடிவெடுக்க உள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், அதன் விலை, இரட்டிப்பாக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இதை அறிந்த மின்துறை மற்றும் உரத்துறை அமைச்சர்கள், இயற்கை எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு உயர்த்தப்படுமானால், மின் கட்டணத்தில், 2.6 சதவீதம், உர விலையில், 13 சதவீத விலை உயர்வு, தவிர்க்க முடியாததாகி விடும்; மேலும் அது, பணவீக்கத்தை மேலும் அதிகரித்து விடும் என, அச்சம் தெரிவிக்கின்றனர். முடிவு என்னவாகும் என்பது, 7ம் தேதி தெரிய வரும்.

No comments: