குண்டு பல்புக்கு பதிலாக சிஎப்எல் பல்பு விரைவில் வழங்கப்படும்


சென்னை : கருத்துகேட்பு கூட்டத்தில் பதிலளித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குனர் ராஜகோபால் பேசியதாவது: மின்திருட்டு மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் மிகவும் குறைவு. அதற்கான நடவடிக்கையை சிறப்பு கண்காணிப்பு குழுவினர், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மூலம் எடுத்து வருகிறோம்.

மின்கட்டணம் செலுத்த சர்வர் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க சர்வர் தரம் உயர்த்தப்படும். நமக்கு மொத்தம் 14 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 
இதில், 70 சதவீதம் தான் இந்திய நிலக்கரி கழகம் மூலம் வாங்கப்படுகிறது. 30 சதவீதம் இந்தோனேஷியாவில்தான் இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி வாங்க மட்டுமே ஆண்டுக்கு ரூ.5,000 கோடி செலவாகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.6.50 பைசா ஆகிறது. ஆனால், மின்நுகர்வோருக்கு ரூ.4.50 பைசாவுக்கு கொடுக்கப்படுகிறது. தவிர்க்க முடியாததால், 3ல் ஒரு பங்கு மின்சாரம் தனியாரிடம் வாங்கப்படுகிறது.  

மின்சாரம் சேமிக்க குண்டு பல்புக்கு பதிலாக சிஎப்எல் பல்பு பொருத்தும் திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இதற்கான டெண்டர் விடப்பட்டு, 15 லட்சம் சிஎப்எல் பல்புகளை விரைவில் வாங்கி கொடுக்க உள்ளோம். பல்பு விலை ரூ.60. ஆனால், மின்நுகர்வோரிடம் ஸீ 15 மட்டுமே வாங்கப்படும். மீதமுள்ள ரூ.45 மின்வாரியம் ஏற்றுக் கொள்ளும். 
இதன் மூலம் மின்சாரம் சேமிக்க முடியும். முதல் கட்டமாக விழுப்புரம் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பின்னர், மற்ற மாவட்டங்களுக்கும் படி படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.





No comments: