மேட்டூர் மின் நிலைய சோதனை ஓட்டம் நிறைவு ; விரைவில் மின்வாரியத்திடம் ஒப்படைப்பு

 மேட்டூர், புது அனல் மின் நிலையத்தில், அரசு நிர்ணயித்தபடி தொடர்ச்சியாக மூன்று நாள், 600 மெகாவாட், மின் உற்பத்தி செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் நிறைவடைந்த நிலையில், இந்த நிலையம், விரைவில் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், மேட்டூரில், சென்னை, "பி.ஜி.ஆர்., எனர்ஜி' நிறுவனம் மூலம், 3,550 கோடி ரூபாயில், புதிதாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி, 2008, ஜூன் 25ல் துவங்கியது. மொத்தம், 101 ஏக்கர் நிலத்தில், 100 சதவீதம் உலர் சாம்பல் வெளியேற்றும் தொழில்நுட்பத்துடன், புது தெர்மல் வடிவமைக்கப்பட்டது.



கடந்த, 2011, ஜூன் 24ல், புது தெர்மலில் மின் உற்பத்தி துவங்கி, 2011, செப்., 24ல் மின் வினியோகம் செய்திருக்க வேண்டும். எனினும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சோதனை ஓட்டம் துவங்கி, அக்டோபரில் அதிக பட்சமாக, 608 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

புது நிலையத்தில், அதிகபட்சமாக, 625 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். எனினும், சோதனை ஓட்டத்தின் போது, தொடர்ச்சியாக, 72 மணி நேரம், மின் உற்பத்தி செய்து காட்டினால் மட்டுமே, புது தெர்மலை, தமிழக மின்வாரியத்திடம் ஒப்படைக்க முடியும்.

சிறு சிறு குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில், கடந்த, 20ம் தேதி மாலை, 5:30 மணி முதல், 23ம் தேதி மாலை, 5:30 மணி வரை, தொடர்ச்சியாக, 72 மணிநேரம், 600 மெகாவாட் முதல், 610 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது.

சோதனை மின் உற்பத்தி நிறைவடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் புது அனல் மின் நிலைய உற்பத்தி, படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று இரவு, உற்பத்தி நிறுத்தப்பட்டது. புது நிலையத்தை, மின் வாரியத்திடம் ஒப்படைக்கும் ஆரம்ப கட்ட பணிகளில், அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இரு மாதங்களில், புது தெர்மல், மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, முதலாவது யூனிட் பழுதடைந்ததால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்தது. இந்நிலையில், புது நிலையத்திலும், மின் உற்பத்தியும் நேற்று படிப்படியாக குறைக்கப்பட்டதால், இரண்டு நிலையங்கள் மூலம் கிடைத்த, 810 மெகாவாட் மின்சாரம் குறைந்து விட்டது. காற்றாலைகள் கைகொடுக்காவிடில், மின்தடை நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

No comments: