சென்னை:மின் கட்டணத்தை மாற்றியமைக்க கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி மனு அளித்திருந்தது. இதில், விவசாயத்திற்கான மின்சார கட்டணம் ஒரு குதிரை திறனுக்கு ரூ.1,750 இருந்து ரூ.2,500 ஆகவும், குடிசைக்கான மின்சார கட்டணம் ரூ.60 இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது. உயர்த்தப்படும் முழு கட்டணமும் தமிழக அரசு மானியமாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டணம் மாற்றியமைப்பதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு முதல் கூட்டம் 3ம் தேதி சென்னையில் தொடங்கி திருச்சி, மதுரையிலும் முடிந்துள்ளது. இதுவரை நடந்த கூட்டத்தில், அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும், மின்உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், சென்னையை போல், மற்ற மாவட்டங்களிலும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும், மின்திருட்டு ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துகளை பெரும்பாலானோர் முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு கூட்டத்திலும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருத்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் அதிகாரிகள் பதில் அளித்தும் கூறும் போது, ‘‘சிறிய அளவிலான குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மின்திட்டப் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் முதல் மின்தடை படிப்படியாக குறையும். டிசம்பர் மாதம் பிறகு மின்தடையே இருக்காது’’ என்றனர். இறுதியாக 17ம் தேதி கோவையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கிறது. கூட்டம் முடிந்த பின்பு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கும். இதனைத் தொடர்ந்து, புதிய கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசிடம் அளிக்கும்.
No comments:
Post a Comment