தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தம் ( dinamani news )

மழைக் காரணமாக மின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதேவேளையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை மின் வாரியம் நிறுத்தியுள்ளது.

கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி வெகுவாகக் குறைந்தபோதும், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், மொத்த மின் உற்பத்தி சராசரியாக 9,000 மெகா வாட் அளவுக்கு இருந்து வந்தது.

இந்த இரு மாதங்களிலும் மின் பயன்பாடு அதிகரித்ததால், மாவட்டங்களில் 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வந்தது.
அவ்வப்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ள மாவட்டப் பகுதிகளில் மட்டும் மின்வெட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இப்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மின் பயன்பாடு குறைந்துள்ளது. அதேநேரம்,காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி 3,000 மெகா வாட் அளவுக்கு கிடைத்து வருகிறது.
இதனால் மொத்த மின் உற்பத்தி இப்போது 9,000 மெகா வாட் அளவைத் தாண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை மொத்த மின் உற்பத்தி 9,212 மெகா வாட்டாக இருந்தது. இதில் காற்றாலை மின் உற்பத்தி 2,108 மெகா வாட் ஆகும்.
பயன்பாடு குறைந்ததால் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ள மாவட்டப் பகுதிகளிலும், சென்னையில் பல பகுதிகளிலும் கடந்த மூன்று நாள்களாக வழக்கமான மின் வெட்டு செய்யப்படவில்லை.
தனியாரிடமிருந்து வாங்குவது நிறுத்தம்: தேவை அதிகரித்து, மின் பற்றாக்குறை நிலவிய நேரத்தில்,அதை சமாளிக்க தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது. தற்போது மின் பயன்பாடு வெகுவாகக் குறைந்த காரணத்தால், தனியாரிடமிருந்து அதிகவிலைக்கு மின்சாரம் வாங்குவதை மின் வாரியம் நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது: மழைக் காரணமாக மின் பயன்பாடு குறைந்துள்ளதோடு, காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஜி.எம்.ஆர்., பி.பி.எம். மற்றும் சாமல்பட்டியில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதை மின் வாரியம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
அதே நேரம், பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த அளவில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி மேலும் அதிகரித்தால், இந்த மின்சார கொள்முதலும் படிப்படியாக குறைத்துக்கொள்ளப்படும் என்றார் அவர்.

No comments: