உடன்குடி மின் திட்டம்: ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


உடன்குடி மின் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க தனியார் நிறுவனங்கள் இதுவரை முன்வராததைத் தொடர்ந்து, ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை மின் வாரியம் நீட்டித்துள்ளது.
இதன்படி, வரும் ஜூலை 19-ஆம் தேதி வரை ஒப்பந்தப் புள்ளிகளை நிறுவனங்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க பாரத மிகு மின் நிறுவனத்துக்கும் (பெல்), தமிழக மின் வாரியத்துக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் அமலுக்கு வராமல் போனது.இந்த நிலையில் இத் திட்டத்துக்கான மொத்த செலவையும், அரசே ஏற்று திட்டத்தை செயல்படுத்தும் என தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதன்படி, தலா 660 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட உள்ளன.
கூட்டாண்மை முறையை கைவிட்டு, தமிழக அரசின் முதலீட்டில் துவங்கப்பட உள்ள, உடன்குடி மின் திட்டத்துக்கான, சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
ஒப்பந்துப் புள்ளிகளை கோரும் பணியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜூன் 19-ஆம் தேதி (புதன்கிழமை) ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனாலும் இதுவரை, ஒரு நிறுவனம்கூட ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பிக்க முன் வரவில்லை. இதனால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:


உடன்குடி மின் திட்டத்தை அமைக்க சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஜூன் 19-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அன்று மாலையே ஒப்பந்தப் புள்ளிகளைத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை ஒரு ஒப்பந்தப்புள்ளிகூட வந்துசேரவில்லை. விலையை முடிவு செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதால், மேலும் கால அவகாசம் வேண்டும் என சில தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.
இதன்படி, ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

No comments: