புதிய மின் கட்டணம் வெளியிட்டது தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம்

MP38_2012 21.06.2013.pdf

சென்னை: குடிசை மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013 - 14ம் ஆண்டுக்கான, மின் கட்டண உயர்வு பரிந்துரையை, 81 நாள் தாமதமாக, கடந்த பிப்., 19ம் தேதி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும், சமர்ப்பித்தன.
தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும், நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதை தொடர்ந்து, மின் கட்டணம் மாற்றியமைப்பதற்கான மனு மீது, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள், சென்னையில், மே, 3ம் தேதியும், திருச்சியில், மே, 8ம் தேதியும், மதுரையில், மே, 10ம் தேதியும், கோவையில், மே, 17ம் தேதியும் நடைபெற்றன. "முழு அளவில் மின்சாரம் வழங்காமல், மின் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதா?' என, பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, கோவையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, தொழில் துறையினர் மற்றும் விவசாயிகள், மின் வாரிய அதிகாரிகளுடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான்கு இடங்களில் நடந்த கூட்டங்களில், 130 பேரிடம் இருந்து, கருத்துகள் பெறப்பட்டன. இவற்றை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்தது.

இதையடுத்து, தமிழக மின் ஒழுங்குமுறை ஆணையம், நேற்று, மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை வெளியிட்டு உள்ளது. இதன்படி, விவசாயத்திற்கான மின்சார கட்டணம் ஒரு குதிரை திறனுக்கு, ரூ.1,750 லிருந்து, 2,500 ரூபாயாகவும், குடிசைக்கான மின்சார கட்டணம், ரூ.60 லிருந்து, 125 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. "இந்த கட்டண உயர்வு தொகை, தமிழக அரசிடமிருந்து, மானியமாக பெறப்படும்' என, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது, 20.35 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 14 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் கட்டண உயர்வு மூலம், தமிழக மின் வாரியத்திற்கு, 964 கோடி ரூபாய், கூடுதல் வருவாயாக கிடைக்கும். மேலும், விளம்பர தட்டிகள், பலகை ஆகியவற்றை பயன்படுத்துவோர், அலங்கார பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு, கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 comment:

jaga said...

தொடருட்டும் தங்கள் பணி