கூடுதலாக 88,537 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசு இலக்கு


மத்திய மின் அமைச்சகம், 12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், அனல், புனல் மற்றும் எரிவாயு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களின், மொத்த உற்பத்தி திறனை, ஏற்கனவே உள்ளதை விட கூடுதலாக, 88,537 மெகாவாட் வரை அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளது.

நாட்டின் மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின், மொத்த உற்பத்தி திறன், 2, 23, 343.60 மெகாவாட். மத்திய அரசு, மின் நுகர்வோருக்கு, தரமான மற்றும் சீரான மின்சாரம் வழங்கல், தொழில் நுட்ப மற்றும் வணிக இழப்பு (உற்பத்தி, பகிர்மான இழப்பு) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறது.நாளுக்கு நாள், தனி நபர் மின் நுகர்வு மற்றும் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்குஏற்ப, மத்திய மின் அமைச்சகம், புதிய மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 16 மிகப் பெரும் அனல் மின் திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், தமிழகம் ஆகிய மாநிலங்களில், தலா, 4,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 16 மிகப் பெரும் அனல் மின் திட்டங்கள் அமையவுள்ளன. இவற்றில், தமிழகத்தில், இரு மிகப் பெரும் அனல் மின் திட்டங்கள் அமைகின்றன.இரு மிகப் பெரும் அனல் மின் திட்டங்களில் ஒன்று, காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகாவில், 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், செய்யூர்அனல் மின் திட்டம் அமைகிறது. இத்திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனம் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மற்றொரு மிகப் பெரும் அனல் மின் திட்டத்திற்கான இடம், தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த, 2012 - 13ம் ஆண்டு, நாட்டின் மொத்த மின் உற்பத்தி இலக்கான, 93 ஆயிரம் கோடி யூனிட்டில், 91,165 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்துள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பழைய மின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பிப்பு, நவீனப்படுத்துதல், தடையின்றி மின் உற்பத்திக்கு தேவையான எரிவாயு மற்றும் நிலக்கரி வழங்கல், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின் உற்பத்தி திட்டங்களை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், மரபு சார்ந்த மின் உற்பத்தி திட்டங்களின் மொத்த உற்பத்தி திறனை, தற்போது உள்ளதை விட, கூடுதலாக,88, 537 மெகாவாட்வரை அதிகரிக்க, மத்திய மின் அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் உற்பத்தி திறனும், கூடுதலாக, 30 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கப்படும் என, மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழு ஆண்டு மின் உற்பத்தி விவரம்

ஆண்டுஉற்பத்தி(யூனிட் கோடியில்)
2006 -0766,252
2007 - 0870,450
2008 - 0972,380
2009 - 1077,160
2010 - 1181,110
2011 - 1287,690
2012 - 1391,165

-நமது நிருபர்-

No comments: