அரசு ஊழியர்கள், பணி தொடர்பான புகார்களை பிரதமருக்கு அனுப்பக் கூடாது

          பணி தொடர்பான புகார் கடிதங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண வேறு வழிகளை அணுகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
 
          இது தொடர்பாக அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் ஊழியர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

          பிரதமர், அமைச்சர்கள், செயலாளர் (பணியாளர் நலன்) உள்ளிட்டோர்களின் பெயருக்கு, மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து பணி தொடர்பான ஏராளமான புகார்கள் பணியாளர் துறைக்கு வருகின்றன.

          மத்திய அரசு ஊழியர்கள், பணி உரிமை உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதுகுறித்த புகார்களை தங்களுக்கு அடுத்தபடியாக உள்ள மேலதிகாரியிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அதற்கென உள்ள வழிமுறைப்படி வழங்க வேண்டும்.

           ஆனால் சமீப காலமாக, உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது தங்களது உடனடி மேலதிகாரியை புறக்கணித்துவிட்டு நேரடியாக பிரதமர், அமைச்சர்கள், செயலாளர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களின் பெயருக்கு தங்கள் புகார்களை அனுப்புவது அதிகரித்து வருகிறது.

          இதுதவிர, தனி நபர்களின் புகார்கள் குறித்து ஊழியர் சங்கங்களும் பிரதமர், அமைச்சர்கள், செயலாளர் உள்ளிட்டோருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வருகின்றன. விதிகளுக்குப் புறம்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் புகார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

           இனிமேல், உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு புகார்களை அனுப்பும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

             இது தொடர்பாக கடந்த 1952, 1968 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ""பணி விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது'' என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click