என்எல்சி-யின் 5% பங்குகள் விற்பனை


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.466 கோடி அரசுக்குக் கிடைக்கும்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
என்எல்சி-யின் 5 சதவீத பங்குகள் அல்லது 7.8 கோடி பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமென்று பங்கு விற்பனைத் துறை மத்திய அரசுக்கு முன்னதாக பரிந்துரைத்திருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை என்எல்சி பங்கின் விலை 3.64 சதவீதம் உயர்ந்து ரூ.59.80-க்கு விற்பனையானது.
தமிழக முதல்வர் எதிர்ப்பு... முன்னதாக இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில், என்எல்சி பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான முடிவு தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பும் முக்கியக் காரணமாகும்.
என்எல்சி பங்குகளை விற்கக் கூடாது என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அதில், பங்குகளை விற்கும் முடிவை எடுத்தால், என்எல்சி தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு மேலும் பிரச்னை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவீதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்று இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) கூறியுள்ளது. இதனை அமல்படுத்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதிக் கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அமைச்சரவைக் குழுவிடம் பங்கு விற்பனைத் துறை சுட்டிக்காட்டியது. என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த கட்டுப்பாட்டில் இருந்து என்எல்சி-க்கு விலக்கு அளிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் அல்லது என்எல்சி நிறுவனத்தை பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி: நிலக்கரி இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளதால் மின் கட்டணத்தை 15 முதல் 17 காசுகள் வரை உயர்த்திக் கொள்ளவும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் எரிவாயு விலையை 60 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் பரிந்துரை மீது முடிவு எடுப்பதை அமைச்சரவைக் குழு ஒத்திவைத்துள்ளது.
பொதுச் சந்தைக்கு உணவுப் பொருள்... 1.05 கோடி டன் உணவுப் பொருளை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றின் பெரும் பகுதி கோதுமை ஆகும். வெளிச்சந்தையில் உணவுப் பொருள்களின் விலையைக் குறைப்பதற்காகவும், புதிய விளைப் பொருள்களை சேமித்து வைப்பதற்காக மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் இடத்தை ஏற்படுத்த வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசு ரூ.5,491 கோடி மானியம் அளிக்க இருக்கிறது. அதாவது வாங்கிய விலையை விட ரூ.5,491 கோடி குறைவாக இந்த உணவு தானியங்களை விற்பனை செய்ய இருக்கிறது. இத்தகவலை உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பங்குகள் விவரம்
நெய்வேலி, ஜூன் 21: என்எல்சி-யின் பங்குகளை அரசு விற்க முடிவு செய்துள்ள நிலையில் அந்நிறுவன பங்குகளின் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: என்எல்சி நிறுவனத்தின் மொத்த பங்குகள் எண்ணிக்கை 167 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரத்து 600.
இதில் மத்திய அரசிடம் உள்ள பங்குகள் எண்ணிக்கை 156 கோடியே 96 லட்சத்து 39 ஆயிரத்து 900 (93.56 சதவீதம்). பொதுமக்களிடமுள்ள பங்குகள் எண்ணிக்கை 10 கோடியே 80 லட்சத்து 69 ஆயிரத்து 700( 6.44 சதவீத பங்குகள்).
மத்திய அரசிடமுள்ள 93.56 சதவீத பங்குகளிலிருந்து 5 சதவீத பங்குகளை (அதாவது 7 கோடியே 84 லட்சத்து 81 ஆயிரத்து 995) விற்று ரூ.466 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. என்எல்சி-யின் நிகர சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரத்து 781 கோடியாகும். ரூ.10 முகமதிப்புள்ள என்எல்சி பங்குகள், வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ.59.80-ஆக இருந்தது.

http://dinamani.com/india/2013/06/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/article1647248.ece

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...