சென்னை, ஜூன். 24 - மின் பயன்பாட்டில் டாக்டர்கள், வழக்கறிஞர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகையை பொற்கொல்லர்கள் மற்றும் குயவர்களுக்கும் நீட்டிக்க அனுமதித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பரிந்துரையின் பேரில் விவசாயிகள் மற்றும் குடிசை பகுதியில் பயன்பாட்டுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியமைத்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவில் இது வரை டாக்டர்கள், வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வசதிகளை பொற்கொல்லர்கள் மற்றும் குயவர்களுக்கும் நீட்டிப்பு செய்ய அனுமதி அளித்துள்ளது.
டாக்டர்கள் தங்களுடைய வீட்டில் அதிகபட்சம் 200 சதுர அடி பரப்பளவில் வைத்துக் கொள்ளும் கிளினிக்குக்கும், வழக்கறிஞர்கள் வீட்டில் அதிகபட்சம் 200 சதுர அடி பரப்பளவில் வைத்துக் கொள்ளும் சட்ட ஆலோசனை அலுவலகத்திற்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணம் வீடுகளுக்கு விதிக்கப்படும் சாதாரண மின் கட்டண அடிப்படையிலேயே கணக்கிட்டு வசூலிக்கும் சலுகை நடைமுறையில் இருந்து வருகிறது. இது போல் பொற்கொல்லர்களுக்கும், குயவர்களுக்கும் தங்களுடைய வீட்டில் அதிகபட்சம் 200 சதுர அடி பரப்பளவில் வைத்துக் கொள்ளும் தொழிற்கூடங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வீடுகளுக்கு விதிக்கப்படும் சாதாரண மின் கட்டண அடிப்படையிலேயே கணக்கிட்டு இனி வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment