விவசாயிகளின் வாழ்வாதாரப் பணிகள் அனைத்துக்கும் இலவச மின்சாரம்

விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளின் வாழ்வாதாரப் பணிகள் அனைத்துக்கும் இலவச மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்களின் வீட்டில் கூடுதல் கட்டுமானப் பணிகளுக்கு சாதாரண கட்டணத்திலேயே மின்சாரம் வழங்கவும் அனுமதி அளித்துள்ளது. மேலும், மின் வாரியம் கோரியிருந்த விவசாயம் மற்றும் குடிசைப் பயன்பாட்டு மின்சாரத்துக்கான கட்டண உயர்வுக்கும் அனுமதியளித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தாழ்வழுத்த குடிசை வகை பயன்பாட்டு மின்சாரத்துக்கான மாத நிலைக் கட்டணத்தை ரூ. 60-லிருந்து ரூ. 125-ஆக அதிகரிக்கவும், தாழ்வழுத்த விவசாய வகைப் பயன்பாட்டு மின்சாரத்துக்கு ஆண்டு நிலைக் கட்டணத்தை ரூ. 1,750-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தவும் பரிந்துரைத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி மின் வாரியம் மனு செய்திருந்தது.
மேலும், இந்தக் கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் கட்டண சுமை நுகர்வோர் மீது திணிக்கப்பட மாட்டாது. அதை அரசே மானியமாக வழங்கும். இந்த இரு பிரிவினருக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் மின் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆணையம், கடந்த மே மாதம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி, மனுக்களையும் பெற்றது. இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளும், பொதுமக்களும் ஆணையத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதார வேளாண்மை தொடர்பான பணிகளுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அதிகாரிகளால் மின் திருட்டு வழக்கு தொடுக்கப்படுகிறது என்று புகார் தெரிவித்தனர்.
இதுபோல் வீட்டில் சிறிய கட்டுமானங்களுக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்கும், குடியிருப்புக் காலனிகளில் பொது வசதிகளுக்காக பயன்படுத்தும் மின் பயன்பாட்டுக்கும் மின் திருட்டு வழக்கு போடப்படுவதாக வீட்டுஉபயோக மின் நுகர்வோர் புகார் தெரிவித்தனர்.
இந்த மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை பரிசீலித்த ஆணையம் இப்போது அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுகுறித்த விவரம்:
மின் வாரியம் பரிந்துரைத்த விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான மின் கட்டண உயர்வை ஆணையம் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் மின் வாரியத்துக்கு ரூ.964 கோடி வருவாய் கிடைக்கும்.
இலவச மின்சாரம்: மேலும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயப் பணிக்கு மட்டுமல்லாமல், வைக்கோல் மற்றும் தட்டு வெட்டும் இயந்திரத்தை இயக்குவதற்கு, கரும்பு பிழிதல் என்பன உள்ளிட்ட அவர்களுடைய வாழ்வாதரப் பணிகளுக்கும் இலவச மின்சாரத்தை, ஒருவழிப் பாதை மின் இணைப்பு மாற்றி மூலம் பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட்டது.
இதுபோல், வீட்டு உபயோக நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று 2,000 சதுர அடிக்கு உட்பட்ட கூடுதல் கட்டுமானப் பணிகளுக்கு உபயோகிக்கும் மின்சாரத்துக்கு, வீட்டு உபோயகத்துக்கான சாதாரண மின் கட்டணமே வசூலிக்க உத்தரவிடப்படுகிறது.
குடியிருப்புக் காலனிகளில் குடியிருப்போரின் பொது வசதிக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்கும் சாதாரண கட்டணமே விதிக்கவும் உத்தரவிடப்படுகிறது.
விளம்பரப் பலகைகள், விளம்பரக் காட்டிகளில் அபரிமிதமான விளக்கொளிக்காக பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மிக அதிக அளவிலான மின் கட்டணம் விதிக்கப்பட வேண்டும்.
மாற்றியமைக்கப்பட்ட இந்தக் கட்டணம் 21-6-2013 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது 31-3-2014 வரை நடைமுறையில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

No comments: