சிறுதொழில் சான்று பெற்றாலும் வங்கிகள், மின்வாரியம் தயக்கம்: மின் மானியம் கிடைப்பதில்லை யாகு தினமலர்

மதுரை: சிறுதொழில்களுக்கான சான்றிதழ் (எஸ்.எஸ்.ஐ.,) ஆன்லைன் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இதில் கையெழுத்து இருக்காது என்பதால் நிறுவனங்களுக்கு, சில வங்கிகள், மின்வாரியம் உதவி செய்ய மறுக்கின்றன.
ரூ.5 கோடி வரையான சிறுதொழில்கள், ரூ.10 கோடி வரையான நடுத்தரத் தொழில்களுக்கும் இச்சான்றிதழ் பெறலாம். உற்பத்தித் தொழில், சேவைத் தொழில் மற்றும் வணிகமும் செய்யலாம். இதன் மூலம் மின்கட்டண சலுகை, வங்கிக்கடன் அனுமதி பெறலாம். மேலும் வங்கிகளில் நடப்பு கணக்கு துவங்க முடியும். குடிசைத் தொழில் மற்றும் கைவினைத் தொழில் களுக்கு, அந்தந்த மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சான்றிதழ் பெறலாம். கைத்தையல் எம்பிராய்டரி, பர் பொம்மை, மூங்கில் கூடை, பொம்மை, சிற்பம், கையால் நகை தயாரிப்பு, மரக் கடைசல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு கைவினைத் தொழில் சான்றிதழ் வழங்கப்படும். தையல், மெஷின் எம்பிராய்டரி, ரெடிமேட் ஆடை தயாரிப்பு, இயந்திர மரக்கடைசல், நகை தயாரித்தல், தின்பண்டங்கள் தயாரித்தல், ஊறுகாய், மர வேலைப்பாடு, பிரின்டிங், ஸ்கிரீன் பிரின்டிங், மாவு அரைத்தல் தொழில்களுக்கு குடிசைத்தொழில் சான்றிதழ் பெறலாம். 


தொழில் செய்யும் இடத்திற்கான வாடகை ஒப்பந்தம் மற்றும் மின்கட்டண ரசீது நகலை இணைத்து, மாவட்ட தொழில் மையத்திற்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகள் நேரடி ஆய்வுக்கு பின், ஒருவார காலத்தில், அதிகாரிகள் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழ் இருந்தால் வணிகப் பயன்பாடு என்பதிலிருந்து குடிசைத் தொழிலுக்கான மின்மானியம் வழங்கப்படும். தொழில்மையம் பங்கேற்கும் கண்காட்சிகளில் இலவச ஸ்டால்கள் தரப்படும். இச்சான்றிதழ் மூலம் வங்கிக்கடன் பெறுவதோடு, ஏற்றுமதியில் ஈடுபடலாம். சிறுதொழில்களுக்கு வழங்கப்படும் சான்றிதழுக்கும், இதே சலுகை உண்டு. ஆனால் சில வங்கிகளுக்கும், மின்வாரியத்திற்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. சான்றிதழில் அதிகாரியின் கையெழுத்து, ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, என்கின்றனர். ஆன்லைன் மூலம் பெறப்படும் சான்றிதழுக்கு, கையெழுத்து தேவையில்லை. மேலும் தொழில் செய்பவரின் டின் நம்பர் இருந்தால் தான், இச்சான்றிதழ் வழங்கப்படும். டின் நம்பர் மூலம் தொழில்மைய இணைய தளத்தை தொடர்பு கொண்டால், அவரைப் பற்றிய முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இவ்வளவு நடைமுறைகள் இருந்தும், மின்மானியம் வழங்க மின்வாரியம் தயங்குகிறது. சில வங்கிகளும் கடன்தர தயங்குகின்றன. அரசு இதுகுறித்து தெளிவு படுத்த வேண்டும்.

No comments: