மெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைது

மெரினா சாலையில் அரசு ஊழியர்கள் மறியல் 500 பேர் கைது
சென்னை, ஜூலை. 25–
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் இன்று நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பயன்தரக் கூடிய ஓய்வூதியம் பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
1.1.2011 முதல் ஊதிய மாற்றத்தில் ஊதிய குழு அமைக்கவும், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தலைமையில் ஊழியர்கள் எழிலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குள்ள 3 வாசல்களும் தடுப்பு கேட் மூலம் போலீசார் அடைத்தனர். வாசல்கள் அடைக்கப்பட்டதை கண்டித்து போலீசாரிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் உள்ளே அனுமதித்தனர். கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் பொதுப்பணி அலுவலகம் வழியாக கடற்கரை காமராஜர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் படுத்து கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வி பட்டாபி, டேனியல் உள்ளிட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

No comments: