5 சதவீத பங்கு விற்பனையை எதிர்த்து என்எல்சி ஸ்டிரைக் தொடர்கிறது


வடலூர்: பங்கு விற்பனை முடிவை எதிர்த்து நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் வேலைக்கு செல்வதால், இப்போதைக்கு பெரிய அளவில் மின் உற்பத்தி பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. என்எல்சி 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை கண் டித்து என்எல்சி தொழிலா ளர் சங்கங்கள் அனைத்தும் கூட்டாக  போராட்டத்தில் குதித்துள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரண்டாவது ஷிப்ட் வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். ஆனால், அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வழக்கம்போல நேற்று பணிக்கு சென்றனர். தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக புதிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனங்கள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மின் உற்பத்திக்கான நிலக்கரி சேமிப்பு கிடங்கில் இந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்எல்சியில் உள்ள 3 அனல்மின் நிலையங்களிலும் வழக்கமான பணிகள் நடந்தன. 

எனினும் வழக்கத்தைவிட 126 மெகாவாட் மின் உற்பத்தி நேற்று குறைந்தது. 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட முதல் அனல்மின் நிலையத்தில், 400 மெகாவாட் மின் உற்பத்தியானது. இந்த அனல்மின் நிலையத்தில் ஒரு பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல, 420 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 422 மெகாவாட் மின் உற்பத்தியானது. மேலும், 1470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது அனல் மின்நிலையத்தில், 1352 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மின் பகிர்மான மையம் (கிரீடு) தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் இது போன்ற சில காரணங்களாலேயே வழக்கத்தை விட 126 மெகாவாட் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது என்றும் என்எல்சி தரப்பில் நேற்று மாலையில் தெரிவிக்கப்பட்டது. கடையடைப்பு: வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து நெய்வேலியில் நேற்று கடையடைப்பு போராட் டம் நடந்தது. நெய்வேலி, நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் மந்தாரக் குப்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

No comments: