உடன்குடி மின் திட்டம்: 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிப்பு

உடன்குடி மின் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என அறிவித்த 6 மாதங்களில் பெரிய முன்னேற்றமாக பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) உள்பட 4 சர்வதேச நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தன.
மொத்தம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டமான உடன்குடி மின் திட்டம் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க இறுதி நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 4 நிறுவனங்கள் புள்ளிகளைச் சமர்ப்பித்தன. உடன்குடி மின் திட்டத்தைச் செயல்படுத்த தனியாரிடையே ஆர்வமும், வரவேற்பும் இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிறுவனங்களிலிருந்து ஒரு நிறுவனம் அடுத்த 2 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும் மிகப்பெரிய அளவில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளதால், அவற்றை விரிவாகப் பரிசீலித்து நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்த நிறுவனங்களில் குறைவான புள்ளிகளைக் கோரியுள்ள நிறுவனம் திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் உடன்குடி மின்திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளோடு, அதற்கான நிதி ஆதாரத்தையும் திரட்டிக்கொள்ள வேண்டும்.
42 மாதங்களில் மின் உற்பத்தி: ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 42 மாதங்களில் உடன்குடியில் மின் உற்பத்தித் தொடங்கப்பட வேண்டும். அதாவது அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்குள் இரண்டு யூனிட்டுகளிலும் (யூனிட்டுக்கு தலா 660 மெகாவாட்) செயல்பாட்டுக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்காக பாரத மிகு மின் நிறுவனத்தோடு மின் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் பல்வேறு காரணங்களால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உடன்குடி திட்டத்தில் கூட்டாண்மை முறை கைவிடப்பட்டு, தமிழக அரசின் முழுச் செலவிலேயே திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வேதச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஜூன் 19-ம் தேதி முதலில் இறுதித் தேதி என அறிவிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச நிறுவனங்கள் கால நீட்டிப்பு கோரியதால் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கும் இறுதி தேதி ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டது.

சிறுதுறைமுகம்: உடன்குடி மின்திட்டத்துக்கான பிரத்யேக சிறு துறைமுகம் அமைக்கப்படுகிறது. கடற்கரையிலிருந்து 7 கிலோமீட்டர் கடலுக்குள் கரி இறக்கும் தளம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து கன்வேயர் பெல்ட் பைப் மூலமாக நிலக்கரி அனல்மின் நிலையத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. மின்திட்டம் தொடங்கப்பட்டவுடன் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த சிறு துறைமுகத்துக்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளன.
எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்குப் பிறகான எரி சாம்பல் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வைக்கப்படுகிறது. இப்போது இந்த எரிசாம்பலில் இருந்து சிமென்ட், செங்கல் ஆகியவை மிக அதிகமாக தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன.
எனவே, சாம்பல் கொட்டும் இடம் காலியாக உள்ளது. எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைந்துள்ள இந்த இடத்தில் 500 ஏக்கரில் தலா 660 மெகாவாட் கொண்ட 2 அலகுகள் அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும். எண்ணூரில் மற்றொரு 670 மெகாவாட் மின் திட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இப்போது பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: