என்.எல்.சி.யின் 3.56% பங்குகளை விற்றாலே போதுமே..: பிரதமருக்கு ஜெ. கடிதம்!


சென்னை: என்.எல்.சி. பங்கு விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும் 15-ந் தேதி தமிழக அதிகாரிகள் குழு மும்பை செல்வதாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று இரவு பதில் அனுப்பி இருந்தார். அதில், என்.எல்.சி.யின் 5% பங்குகளை தமிழக அரசு வாங்கி கொள்வது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க ஆகஸ்ட் 8-ந்தேதிக்குள் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கூறியிருந்தார். இக் கடிதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ள் என்.எல்.சி.யின் 5% பங்கு விற்பனை தொடர்பாக நான் எழுதிய கடிதத்திற்கு நீங்கள் எழுதிய பதில் கடிதம் 12-ந் தேதி கிடைத்தது. நான் கடந்த மாதம் 25-ந்தேதி எழுதியுள்ள கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். என்.எல்.சி.யின் 5% பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பாக அதிகாரி ஒருவரை பேச்சு வார்த்தைக்கு அனுப்ப நீங்கள் ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில் பங்கு சந்தையின் செயலாளர் கடந்த 6-ந்தேதியே அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். எனது உத்தரவின்படி பேரில் தலைமைச் செயலாளர் 7-ந்தேதி அதற்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். அதில் தமிழக அரசின் நிதித் துறை முதன்மை செயலாளர், பேச்சு நடத்துவதற்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 10-ந்தேதி நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்ட மேம்பாட்டு முதன்மை செயலாளர், தொழில்துறை இணை செயலாளர் ஆகியோரை கொண்ட குழு டெல்லிக்கு சென்று பேச்சு நடத்தியது. அந்த குழுவினர் மத்திய அரசுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தமிழக அரசின் எந்தெந்த பொதுத்துறை நிறுவனங்கள் என்.எல்.சி.யின் பங்குகளை வாங்குவது என்ற தகவலையும் தெரிவித்தனர். அதோடு பங்குகளின் விலை நிர்ணயம் மற்றும் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாற்றும் கால அளவு ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த பங்குகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக நான் கடந்த 7-ந்தேதி எழுதிய கடிதத்திலேயே என்.எல்.சி.யின் 5% பங்குகளை முழுமையாக வாங்குவதற்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். 6.44% பங்குகள் மக்களிடம் உள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க 3.56% பங்குகளை விற்றாலே போதுமானது. என்.எல்.சி.யின் 5% பங்குகளை பெறுவது தொடர்பாக செபி அதிகாரிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நான் மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன். அந்த குழு வருகிற 15-ந்தேதி மும்பை சென்று பேச்சுவார்த்தை நடத்தும். அதில் பங்குகள் மாற்றம் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படும். பங்கு மாற்றம் தொடர்பாக அந்த கூட்டத்தில் இறுதி எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இதன் மூலம் தற்போது நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். மும்பையில் 15-ந்தேதி தமிழக அரசு அதிகாரிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் செபி குழுவினருக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.



No comments: