திருப்பூர்: உடைந்த 200 மின் கம்பங்கள் ஒரே நாளில் மாற்றம்: மாநில அளவில் முதல் முகாம்

திருப்பூர் பகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாநிலத்திலேயே முதன் முறையாக இம்முயற்சி மூலம் ஒரே நாளில் 200 மின்கம்பங்கள் மாற்றப்பட்டன.

திருப்பூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 35 பிரிவுகள் உள்ளன. இவற்றில், மோசமான நிலையில் உள்ள 200 மின் கம்பங்களை ஒரே நாளில் மாற்றும் சிறப்பு முகாம் (ஆபரேசன் டேமேஜ்ட் போல்) நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் நேற்று முன்தினம் நடந்தன. மாற்ற வேண்டிய மின் கம்பங்கள் உள்ள இடங்களில், ஆங்காங்கே புதிய மின் கம்பங்கள் இறக்கி வைக்கப்பட்டன. அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், ஒரு உதவி பொறியாளர் தலைமையில் 10 ஊழியர்கள் கொண்ட குழுவினர் நேற்று காலை 6.00 மணி முதல் பணியை துவக்கினர். சேதமான மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பங்கள், ஸ்டே கம்பி மற்றும் எர்த் ஒயர் உடன் அமைக்கும் பணி நடந்தது. இப்பணியை கலெக்டர் கோவிந்தராஜ், மின்வாரிய முதன்மை தலைமை பொறியாளர் தங்கவேல் பார்வையிட்டனர். திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, கோட்ட பொறியாளர் சுப்ரமணியம் மற்றும் அலுவலர் குழு அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இப்பணியை நேரில் சென்று பார்வையிட்டு, ஆலோசனை அளித்தனர்.


தலைமை பொறியாளர் தங்கவேல் கூறியதாவது: கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளடக்கிய மின் பகிர்மான வட்டத்தில் 4,566 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை படிப்படியாக மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. மாநில அளவில் முதன் முறையாக இந்த "ஆபரேசன் டேமேஜ்ட் போல்' சிறப்பு முகாம் நடத்தி, ஒரே நாளில் 200 கம்பங்கள் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்கு பிரிவு வாரியாக 10 ஊழியர் கொண்ட குழு, மின் ஊழியர் மற்றும் அவுட் சோர்சிங் முறையில் பணியமர்த்தப்பட்டு பணி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் சராசரியாக ஆறு கம்பங்கள் என்ற எண்ணிக்கையில் மாற்றப்படுகிறது. ஒரு கம்பம் மதிப்பு 4,500 ரூபாய். புதிய கம்பங்கள் அமைக்கும் இடங்களில், மின் ஒயர் மாற்றும் அவசியம் ஏற்படவில்லை. இருப்பினும், எர்த் ஒயர் இல்லாத கம்பங்களில் எர்த் ஒயர் இணைக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு விரைவில் கலெக்டர் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click