சீர்காழி அருகே புதிய அனல் மின்நிலையம்: என்.எல்.சி. நிறுவனம் தகவல்


சீர்காழி அருகே புதிய அனல் மின்நிலையம்: என்.எல்.சி. நிறுவனம் தகவல்புதுடெல்லி, ஜூலை.10-

சீர்காழி அருகே 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையத்தை அமைக்க இருப்பதாகவும், இதற்கு தேவையான நிலக்கரியை பெற நிலக்கரி சுரங்கத்தை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும் என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தில் தனக்கு உள்ள 93.96 சதவீத பங்குகளில் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அந்த பங்குகளை விற்பது என்றால் அவற்றை தமிழக அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விற்குமாறு மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார். 

அதை ஏற்று என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ள பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (செபி), பங்குகளை வாங்க விரும்பும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகளை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில், மும்பை பங்கு சந்தையில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் தமிழ்நாட்டில் புதிதாக அனல் மின்நிலையம் அமைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும் ரூ.24 ஆயிரத்து 770 கோடி மதிப்பிலான இரு அனல் மின்நிலைய திட்டங்களை என்.எல்.சி. தொடங்க உள்ளது. இந்த இரு அனல் மின்நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை பெறுவதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கி இருக்கிறது. 

தமிழ்நாட்டில் இந்த அனல் மின்நிலையம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தின் அருகே அமைய இருக்கிறது. 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின்நிலைய திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்படும். 

அங்கு ரூ.10 ஆயிரத்து 398 கோடி செலவில் அமைய இருக்கும் முதல் பிரிவில் 1,980 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தமிழக அரசின் மூலம் இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும் அமைய இருக்கும் இரு அனல் மின்நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியை பெறுவதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கி இருக்கிறது. சீர்காழி அனல் மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை பெறுவதற்காக சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மற்றும் ராய்கார் மாவட்டங்களில் அமைந்து உள்ள ஜிக்லா-பார்பள்ளி நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

உத்தரபிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் அமைய இருக்கும் இந்த இரு புதிய அனல் மின்திட்டங்களும் செயல்£பட்டுக்கு வரும் போது, என்.எல்.சி. நிறுவனத்தின் மின்உற்பத்தி திறன் 11 ஆயிரத்து 195 மெகாவாட்டை எட்டும்.

இவ்வாறு என்.எல்.சி. நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click