Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Jul 5, 2013

நெய்வேலியும்... நெருக்கடியும்... ஒரு சிறப்புப் பார்வை


தமிழ்நாட்டின் மின் தேவைக்கு கைகொடுக்கும் முக்கிய மின் உற்பத்தி நிறுவனம் என்.எல்.சி.
நெய்வேலியில் உள்ள இந்த நிறுவனத்தில் 2 அனல் மின் நிலையங்கள் உள்ளன. முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், 2-வது அனல்மின் நிலையத்தில் 1470 மெகாவாட்டும், முதல் அனல் நிலையம் விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 2490 மெகாவாட். இவற்றில் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

இதில் 1200 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள மின்சாரம் புதுச்சேரி மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய மின் பகிர்மான அமைப்பின் மூலம் அனுப்பப்படுகிறது.

நிலக்கரி தோண்டி எடுப்பது, மின் உற்பத்தி, அலுவலக பணி, நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் 27 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். என்.எல்.சி.யில் பணிபுரிபவர்களில் 13 ஆயிரம் பேர் நிரந்தர பணியாளர்கள், அதிகாரிகள், என்ஜினியர்கள் எண்ணிக்கை 4 ஆயிரம். இவர்கள் தவிர 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் இங்கு வேலை செய்கிறார்கள்.

ஊழியர்களை நம்பி அவர்களுடைய குடும்பங்களும் உள்ளன. இந்த நிறுவனத்தை சார்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாக வேலை கிடைக்கிறது. நெய்வேலி பகுதியில் உள்ள பெரும்பாலானோர், ஏதாவது ஒரு வகையில் என்.எல்.சி.யை நம்பியே வாழும் நிலை உள்ளது.

என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்த பங்கு விற்பனை, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயம் ஆக்குவதற்கு அச்சாரம். எனவே, ஒரு சதவீத பங்கை கூட விற்பனை செய்யக்கூடாது என்பது தொழிலாளர்களின் வாதம்.

என்.எல்.சி.யின் 10 சதவீத பங்குகளை பொதுமக்களிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று 'செபி' நிபந்தனை விதித்துள்ளது. இதன் காலக்கெடு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைகிறது. எனவே 5 சதவீத பங்குகளை மட்டுமே விற்க அனுமதி வழங்கியிருக்கிறோம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதன் மூலம் 466 கோடி ரூபாய் தான் கிடைக்கும். ஆனால் இந்த நிறுவனம் வருடத்துக்கு ரூ.1,500 கோடி லாபம் சம்பாதிக்கிறது. எனவே, பங்குகளை விற்க அனுமதிக்கமாட்டோம் என்று தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

என்றாலும், மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. எனவே, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். இதுபற்றி செபிக்கும் பரிந்துரை செய்யப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள், என்.எல்.சி. தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தன. என்.எல்.சி.யில் 16 தொழிலாளர் சங்கங்கள், 3 என்ஜினியர் சங்கங்கள், 2 நல சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் ஒன்று என 22 சங்கங்கள் உள்ளன. இவை அனைத்துமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இவர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதையடுத்து என்ஜினியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன. மற்ற சங்கங்கள் திட்டமிட்டபடி நேற்று இரவு முதல் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக என்.எல்.சி. மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த மின்சார தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட். தற்போது பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 8 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மின் பற்றாக்குறை 3 ஆயிரத்து 500 மெகாவாட். காற்றாலை மின் உற்பத்தி மூலம் மின் தேவை ஓரளவு சமாளிக்கப்படுகிறது. காற்று வீசினால்தான் இந்த மின்சாரம் வரும்.

ஆனால் என்.எல்.சி. ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக கிடைக்கும் 1200 மெகாவாட் மின்சாரம் அடியோடு நின்றுவிட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கனவே மின் தட்டுப்பாட்டில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழக மக்கள் மேலும் சிரமங்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் உறுதியாக உள்ளனர். 

5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் அறிவிப்பு அவர்கள் கோணத்திலும், பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்ற தொழிலாளர்களின் கோரிக்கை இவர்களது பார்வையிலும் சரியானதாக இருக்கலாம். என்றாலும் தமிழகம் மின் தட்டுப்பாடு காரணமாக தவிக்கும் இந்த காலகட்டத்தில் இருதரப்பினரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம். இதற்கு உரிய தீர்வு இல்லை என்றால் உடனடியாக பாதிக்கப்படுவது தமிழக மக்கள் என்பதுதான் உண்மை.
Post a Comment