திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பாளர்கள் பெயர் நீக்கம் : தேர்தல் அதிகாரி ஓட்டம் தினமலர்


 திருப்பூரில், மின்வாரிய கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் சங்கம் முன் நேற்று திரண்டனர். உடனடியாக, தேர்தல் அதிகாரி அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் குமார் நகரில், தமிழ்நாடு மின்வாரிய திருப்பூர் கோட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் உள்ளது.
இச்சங்க தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டன. வேட்பு மனுக்கள் வழங்குவதிலேயே பிரச்னை ஏற்பட்டது. உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட பின், ஒரு மணி நேரம் தாமதமாக மனுக்கள் வழங்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட 37 பேர் மனு தாக்கல் செய்தனர். இப்பட்டியல் நேற்று முன்தினம் மாலை, சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, அப்பட்டியல் எடுக்கப்பட்டு 11 பேர் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த உறுப்பினர்கள் அங்கு கூடினர். தேர்தல் அதிகாரி கருணாபூபதியை அணுகியபோது, அவர் எதுவும் பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் வந்ததை அறிந்த அவர், சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு, அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்திரன் கூறியதாவது: மனு தாக்கல் முடிந்ததும் 37 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாமல், 11 பேர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., அம்பேத்கர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இச்சங்கங்களை சேர்ந்த நான்கு பேருடன், ஆளும்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பெயரையும் சேர்த்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது, எங்கள் அமைப்புகளுக்குள் பிளவை ஏற்படுத்தும், ஜனநாயக படுகொலை என கருதுகிறோம். தொடர் நடவடிக்கை குறித்து சங்க மேலிட ஆலோசனைப்படி நடக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்துக்கான முதல்கட்ட தேர்தலே பெரும் பிரச்னைகளுடன் துவங்கியதால், மாற்றுக்கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click